தமிழக இளம் வீரர் சாய் சுதர்ஷன் அதிரடி ; டெல்லியை எளிதாக வீழ்த்தியது குஜராத்!

0
957
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசனின் ஏழாவது போட்டி டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் டெல்லி அணி தோற்று முதலில் பேட் செய்ய வந்தது. டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் வந்தார்கள்.

- Advertisement -

டெல்லி அணி 29 ரன்களை எட்டி இருந்த பொழுது முகமது சமீ வீசிய ஒரு சின்ன பவுன்சர் பந்தில் வழக்கம்போல் தனது பலவீனத்தை வெளிப்படுத்தி பிரித்வி ஷா ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த மார்ஸையும் முகமது சமி வெளியேற்றினார். அடுத்து டேவிட் வார்னர் அல்ஜாரி ஜோசப் பந்தில் 32 பந்தில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே ரயிலி ரூசோவையும் அல்ஜாரி ஜோசப் வெளியேற்றினார்.

இதற்குப் பிறகு இளம் வீரர் சர்பராஸ் கான் ஒரு முனையில் நின்று அணியை கரையேற்ற போராடிக் கொண்டிருந்தார். இன்று அறிமுக வீரராக களம் கண்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதை அடுத்து சர்பராஸ் கான் 34 பந்துகளுக்கு 30 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. குஜராத் அணிதரப்பில் ரசித் கான் நான்கு ஓவர்கள் பந்து வீசி 31 ரன்கள் விட்டு தந்து மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சகா மற்றும் சுப்மன் கில் இருவரையும் அன்றிச் நோர்க்கியா தனது வேகத்தில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 ரன்னில் கலில் பந்தில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஆட்ட சூழலை உணர்ந்து பொறுப்பாக விளையாடி அணியை சிக்கலில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள். இந்த ஜோடி நான்காவது விக்கட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. விஜய் சங்கர் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து உள்ளே வந்த மில்லர் முகேஷ் குமார் ஓவரில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க ஆட்டம் எளிதாக குஜராத் கைக்குள் வந்துவிட்டது. 18.1 ஓவரில் குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டேவிட் மில்லர் பதினாறு பந்தில் 31 ரன்களை எடுத்தார். இன்னொரு பக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடி சாய் சுதர்சன் அரைசதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 48 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ்ர்கள் உடன் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அன்றிச் நோர்க்கியா நான்கு ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.