நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் வலிமையான சவுராஷ்டிரா அணிக்கு எதிராக தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜெயதேவ் உனட்கட் தலைமையிலான சௌராஷ்ட்ரா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தமிழக அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 203 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.புஜாரா 16 ரன் மட்டுமே எடுக்க அர்பித் வாஸ்தவா 62 ரன் எடுத்தார். சோனு யாதவ், சாய் கிஷோர் மற்றும் முகமத் முகமத் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் கலக்கல்
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய தமிழ்நாட்டு அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நாராயணன் ஜெகதீசன் 100 ரன்கள், சாய் சுதர்சன் 82 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
இதை பயன்படுத்தி பிரதோஷ் ரஞ்சன்பால் 49 ரன்கள், பாபா இந்திரஜித் 40 ரன்கள், ஆண்ட்ரே சித்தார்த் 38 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் குவித்தது. சௌராஷ்டிரா அணி தரப்பில் கேப்டன் ஜெயதேவ் உனட்கட் ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
மாஸ் காட்டிய சிங்
சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. ஆனால் முதல் இன்னிங்ஸ் விட பெரிய அதிர்ச்சிகள் அந்த அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் காத்திருந்தது. தமிழக வீரர் குர்ஜப்நீத் சிங் பந்துவீச்சில் சிக்கி வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் சுருண்டது.
இதையும் படிங்க : 8 இன்னிங்ஸ் 171 ரன்.. இந்திய அணிக்கு எதிராக.. ஸ்டீவ் ஸ்மித் இந்த இடத்தில்தான் களம் இறங்குவார் – ஜார்ஜ் பெய்லி அறிவிப்பு
இதன் காரணமாக தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குர்ஜப்நீத் சிங் 14 ஓவரில் வெறும் 22 ரன்கள் மட்டுமே தந்து ஆறு விக்கெட் கைப்பற்றி இன்னிங்ஸ் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் இருந்தார். வலிமையான சௌராஷ்டிரா அணியை தோற்கடித்து இந்த வருட ரஞ்சி சீசனை தமிழக அணி சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.






