விஜய் ஹசாரே கோப்பையில் மிசோரம் அணியை 71 ரன்களில் ஆல் அவுட் செய்து தமிழ்நாடு அணி அபார வெற்றியை பெற்றது. பிசிசிஐ நடத்தும் பிரதான உள்நாட்டு ஒரு நாள் தொடர் என்றால் அது விஜய் ஹசாரே தொடர் தான். இந்த தொடரில் டி பிரிவில் தமிழ்நாடு அணி மிசோரமை எதிர்கொண்டது.
விஜயநகரம் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய மிசோரம் அணி வீரர்கள் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
வருண் சக்ரவர்த்தி, விஜய் சங்கர் அபார பந்துவீச்சு
குறிப்பாக சந்தீப் வாரியர் அபாரமாக பந்து வீசி மிசோரம் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். மிசோரம் அணியின் ஆண்டர்சன்12 ரன்களிலும், லால்ஹிரா டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதைப் போன்று சிஎஸ்கே அணி வீரர் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஈடுபட்டார்.
அவர் இரண்டு ஓவர்களில் இரண்டு மைடன்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒரு கட்டத்தில் மிசோரம் அணி 37 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் தான் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் பந்து சென்றது.
71 ரன்களில் மிசோரம் அணி ஆல் அவுட்
அவர் தன்னுடைய மாயாஜால பந்துவீச்சை வீசினார். வருண் சக்கரவர்த்தியின் சுழலுக்கு மிசோரம் அணி தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வருண் சக்கரவர்த்தி 5.2 ஓவர்களில் வீசி வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக அக்னி சோப்ரா 23 ரன்களும், மோகித் ஜங்கரா 17 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 21.2 ஓவர்கள் எல்லாம் மிசோரம் அணி 71 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
மிசோரம் அணியின் ஸ்கோர் கார்டை பார்க்கும்போது பழைய காலத்து லேண்ட்லைன் போன் நம்பர்கள் போல் இருந்தது. இதை அடுத்து 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. நாராயண் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும்.
இதையும் படிங்க: ரோகித் சர்மாவின் டிஸ்கஷனுக்கு என்னை கூப்பிடல.. அவர் முடிவு ரொம்ப உணர்வுபூர்வமானது – ரிஷப் பண்ட் பேச்சு
மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜா 32 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதனால் 10 ஓவர் முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி விஜய் ஹசாரே கோப்பையில் 5 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, ஒரு தோல்வி சந்தித்து இருக்கிறது. தற்போது 14 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அணி இன்னும் ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அரை இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும்.