பரபரப்பான ஆட்டத்தில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடியில் பஞ்சாப் அணி லக்னோ அணியை வீழ்த்தியது!

0
2309
PBKS

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது போட்டி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே லக்னோ மைதானத்தில் நடைபெற்றது!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்று விளையாடாத நிலையில் புது கேப்டனாக வந்த சாம் கரன் டாசை வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்!

- Advertisement -

பஞ்சாப் அணியின் முதல் விக்கட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் கையில் மேயர்ஸ் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தீபக் ஹூடா 2, குர்னால் பாண்டியா 18, நிக்கோலஸ் பூரன் 0, ஸ்டாய்னிஸ் 15, கௌதம் 1, யுத்வீர் சிங் 0, ஆயுஸ் பதோனி 5* என ரன்கள் எடுத்தார்கள்.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் 56 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் தந்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு அறிமுக வீரர் அதர்வா ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பிரப்சிம்ரன் நான்கு ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஷார்ட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்து பவர் பிளேவின் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பத்து ஆண்டுகள் 331 நாட்கள் கழித்து ஐபிஎல் தொடரில் விளையாடிய ஹர்பரித் சிங் சிக்கந்தர் ராஸாவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு முனையில் சிக்கந்தர் ராஸா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கேப்டன் சாம் கரன் 6, ஜிதேஷ் சர்மா 2 ரன்களில் வெளியேறினார்கள். சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராஸாவும் 41 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு நடுவில் களத்திற்கு வந்த தமிழக வீரர் ஷாருக்கான் தான் சந்தித்த மார்க் வுட்டின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 20 ரன்கள் தேவைப்பட, 19ஆவது ஓவருக்கு வந்த மார்க் வுட்டை மீண்டும் சிக்ஸருக்கு அடித்தார் ஷாருக்கான். ஹர்ப்ரித் பிரார் அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி ஓவருக்கு ஏழு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

ரவி பிஷ்னோய் வீசிய அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த ஷாருக்கான், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். லக்னோ அணி தரப்பில் அறிமுகவீரர் யுத்வீர் சிங், கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடிய லக்னோ அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்!