19 ரன் பரிதாபம்.. வருண் சக்கரவர்த்தி விஜய் சங்கர் போராட்டம் வீண்.. தமிழக அணி நாக் அவுட்டில் வெளியேறியது

0
771
Varun

நடப்பு விஜய் ஹசாரே டிராபி தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

தற்போது நடைபெற்று கொண்டு வரும் விஜய் ஹசாரே டிராபி காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டி இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

பந்துவீச்சில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி

முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அபிஜித் தோமர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 125 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 111 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் மகிபால் லோம்ரர் அதிரடியாக 49 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் சேர்த்தது. தமிழக அணியின் தரப்பில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒன்பது ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான ரன்கள் எடுத்தது.

- Advertisement -

போராடிய நாராயணன் ஜெகதீசன் மற்றும் விஜய் சங்கர்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தமிழக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் நாராயணன் ஜெகதீசன் 52 பந்துகளில் அதிரடியாக 65 ரன்கள் எடுத்தார். ஆனால் ரகேஜா 11, பூபதி குமார் 0, பாபா இந்திரஜித் 35 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தமிழக அணி நெருக்கடியில் சிக்கியது.

இதைத் தொடர்ந்து விஜய் சங்கர் உடன் இணைந்து முகமத் அலி 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதைத் தொடர்ந்து கடைசி ஏழு ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. தமிழக அணி ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் விஜய் சங்கர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் இருந்தார்கள்.

இதையும் படிங்க : 2025 சாம்பியன் டிராபி தொடர் மொத்தமாக துபாய்க்கு வருகிறதா? ஐசிசி விதித்துள்ள கெடு.. வெளியான தகவல்கள்

இந்த நிலையில் விஜய் சங்கர் 49 ரன்கள், வருண் சக்கரவர்த்தி 18 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்த காரணத்தினால் தமிழக அணியின் காலிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது. தமிழக அணி 47.1 ஓவரில் 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியின் தரப்பில் அமன் சிங் செகாவத் 3, அனிகேட் சவுத்ரி மற்றும் அஜய் சிங் இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இறுதியாக ராஜஸ்தானி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தமிழக அணியை 19 வித்தியாசத்தில் வென்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -