இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இந்திய அணி ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி நான்காவது போட்டியை வென்று இருக்க இன்று ஐந்தாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளில் மாற்றம்
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பக்கம் முதல் முறையாக பின் ஆலன், பெவான் ஜேக்கப் மற்றும் லாக்கி பெர்குஷன் இருவரும் வந்திருக்கிறார்கள். மேலும் கைல் ஜெமிஷன் மீண்டும் இடம்பெற்றிருக்கிறார். முதல் முறையாக நியூசிலாந்து அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது.
அதே சமயத்தில் இந்திய அணியில் முக்கிய வீரர்களான இஷான் கிஷான், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் மூவரும் திரும்பி வந்திருக்கிறார்கள். இந்திய அணியும் முழு பலமான அணியை களம் இறக்கி இருக்கிறது.
இவருக்காக காத்திருக்கிறோம்
டாஸ் நிகழ்வில் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். நேற்று நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பொழுது இங்கு கடுமையான பனிப்பொழிவு இருந்தது. எனவே எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இரண்டாம் பகுதியில் இலக்கை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்று நாங்கள் சோதித்துப் பார்க்க விரும்புகிறோம்”
இதையும் படிங்க : இந்தியாவுடன் ஃபைனல் வந்தால் பாகிஸ்தான் விளையாட கூடாது.. நாம யாருனு காட்டணும் – ரஷித் லத்திப் பேட்டி
“இஷான் கிஷான் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி மூவரும் அணிக்குள் வருகிறார்கள். அதே சமயத்தில் திருவனந்தபுரம் கவலைப்பட வேண்டாம் சஞ்சு சாம்சன் விளையாடுகிறார். திலக் வர்மா டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் அணியில் இணைந்து விடுவார். அவர் வரும் பொழுது நாங்கள் இன்னும் பலமாக மாறுவோம். அவருக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






