ஆசியக் கோப்பை தொடரில் தான் சிறப்பாக செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வெட்கப்படவில்லை என இந்திய டி20 அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் அமையவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் மட்டுமே அவர் நன்றாக விளையாடி இருந்தார்.
நான் வெட்கப்படவில்லை
இது குறித்து பேசி உள்ள சூர்ய குமார் யாதவ் கூறும்பொழுது ” நான் ஆசிய கோப்பை தொடரில் நன்றாக விளையாடவில்லை என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தவித வெட்கமும் கிடையாது. நான் தொடரை நல்ல விதத்தில் ஆரம்பித்தேன். ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுத்தேன். ஆனால் அதற்குப் பிறகு ஏதோ ஒன்று எனக்கு சரியாக செல்லவில்லை”
“மேலும் என்னுடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி சரியாக இருக்கும் பொழுது நான் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பி வந்துவிட முடியும் என்று எனக்குத் தெரியும். மேலும் தற்போது அணி வெற்றிப் பாதையில் இருப்பதால் அணியின் சூழல் நன்றாக இருக்கிறது. என்னுடைய பேட்டிங் ஃபார்ம் அணியை பாதிக்கவில்லை. ஒருவேளை பாதித்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”
கில்லால் ஏற்பட்ட பிரச்சனை
“கில் மீண்டும் அணிக்கு திரும்பியதும் சஞ்சு சாம்சன் ஓபன் செய்ய முடியாது என்று தெரியும். அதே சமயத்தில் அவர் கடந்த சில மாதங்களாக இந்திய டி20 அணியில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனவே அவருக்கு வாய்ப்பு எப்படி இருக்கும் என பலவாறான குழப்பங்கள் வெளியில் சென்றது. ஆனால் அவர் விளையாட மாட்டார் என நான் எப்பொழுதும் நினைத்ததே இல்லை”
இதையும் படிங்க: 2027 ODI உலக கோப்பையில்.. விராட் ரோகித் ஆடுவார்களா? – கேப்டன் கில் வெளிப்படையான பதில்
” பிறகு ஆசியக் கோப்பை முதல் பயிற்சி அமர்வில் நான் இது குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். சஞ்சு சாம்சனிடம் ‘முன்பு நீங்கள் 35 பந்தை சந்தித்து 70 ரன்கள் எடுக்கும் வாய்ப்பில் இருந்தீர்கள். தற்போது 10 முதல் 20 பந்துகள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆரம்பம் போலவே நீங்கள் குறைந்த பந்துகளிலும் அதே தாக்கத்தை தர வேண்டும்’ என்று தெளிவு படுத்தினோம். பிறகு அதற்கு ஏற்ற வகையில் அவர் தயாரானார்” என்று கூறியிருக்கிறார்






