இன்று நமிபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் அதிரடியாக 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 28 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து நமிபியா அணி 116 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இஷான் செய்தது சாதாரணம் இல்லை
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “இது எங்கள் அனைவருக்குமே நல்ல போட்டியாக இருந்தது. இது பேட்டிங் செய்வதற்கு சுலபமான ஆடுகளம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இஷான் மற்றும் சஞ்சு இருவரும் தொடங்கிய விதத்தை பார்க்கும் பொழுது இது எளிதான ஆடுகளம் போலவே தெரிந்தது. ஆனால் இது அப்படி கிடையாது. நான் உள்ளே சென்று விளையாடும்போது ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஒட்டி நின்று வந்தது”
“அதே சமயத்தில் நமிபியா அணி பந்துவீச்சாளர்களை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் மிகவும் ஒரு அணியாக சேர்ந்து சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் கொண்டு வந்த சிறந்த திட்டங்களுக்கு வேலை செய்தார்கள். இதற்கான முழு பாராட்டையும் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்”
சுழல் கூட்டணி
“மேலும் இந்த போட்டியில் காய்ச்சலில் இருந்து திரும்பி வந்திருக்கும் பும்ரா நான்கு ஓவர்களையும் முழுதாக வீசியது சந்தோஷமான விஷயம். அவர் அணியில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அவர் அடுத்த போட்டிக்கு தயாராக இருக்கிறார். ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மிகவும் அதிரடியாக இருப்பதோடு பந்துவீச்சில் பெரிய உதவியாக இருக்கிறார்”
இதையும் படிங்க : 93 ரன்.. டி20 உகோ வரலாற்றில் இந்திய அணி சாதனை வெற்றி.. இஷான் வருண் அசத்தல்.. இரண்டாவது சுற்று வாய்ப்பு பிரகாசம்
“வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் இருவரும் இணைந்து பந்து வீசும் போது அது மிக அபாயமான ஜோடியாக இருக்கிறது. அவர்கள் ஆட்டத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வந்து சிறப்பாக பந்து வீசுகிறார்கள். இதுவரை நடந்த விஷயத்தில் மகிழ்ச்சி. நாங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்பொழுது சரியான பாதையில் இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






