நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது செமி பைனலில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
மேலும் இந்த போட்டி கடைசி ஓவர் வரையில் மிகவும் பரபரப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. அதே சமயத்தில் களத்தில் இருந்த வீரர்களுக்கு மிகப்பெரிய டென்ஷன் நிலவியது. இது குறித்தும் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
இதயத்துடிப்பு அதிகரித்தது
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “இந்தியாவில் இவ்வளவு பெரிய போட்டியை விளையாடுவதும், இவ்வளவு பெரிய அணியை வழிநடத்துவதும் பெரிய விஷயம். மேலும் இந்த போட்டியில் வென்று நாங்கள் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக அகமதாபாத் செல்வது இன்னும் சிறந்த உணர்வாக எங்களுக்கு அமைந்திருக்கிறது”
“சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்த பொழுதே அவருக்கு இந்த ஆடுகளத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக தெரிந்திருந்தது. ஒரு விக்கெட் சீக்கிரத்தில் விழுந்த பொழுதும் கூட ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால் அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் கொடுத்த கடின உழைப்புக்கு இப்படிப்பட்ட ஆட்டங்கள் வெளியில் வரவேண்டும்”
நானே கேட்டேன்
“இந்த போட்டியில் எனக்கு இதயத்துடிப்பு 160 முதல் 170 வரை எகிறிவிட்டது. உங்களுக்கு எதிராக நாங்கள் எவ்வளவு ரன்கள்தான் எடுக்க வேண்டும் என இங்கிலாந்து கேப்டனிடம் கேட்டே விட்டேன். இது பேட்டிங் செய்வதற்கு சிறந்த ஆடுகளமாக இருந்தது. ஆனால் நம்முடைய பவுலர்கள் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தினார்கள்”
இதையும் படிங்க : எங்க தோல்விக்கு நான் தான் முழு காரணம்.. ஒரு தப்பு மொத்தமா மாத்திடுச்சு – ஹாரி புரூக் உருக்கமான பேச்சு
“பும்ரா இந்திய அணிக்காக பல வருடங்களாக என்ன செய்தார் என்பதையும், அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்று மீண்டும் அவர் அதையே செய்தார். அவர் தனது குணநலத்தையும் தைரியத்தையும் காட்டி இங்கிலாந்திடம் இருந்து போட்டியை பறித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்” என்று கூறியிருக்கிறார்.






