இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக சூரியகுமார் யாதவ் பொறுப்பேற்று நேற்று தனது முதல் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்தார். மேலும் அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார். இந்த நிலையில் இந்திய அணியை மேற்கொண்டு தான் எப்படி வழிநடத்த விரும்புகிறேன்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
நேற்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் 6.1 ஓவரில் வெளியேறினாலும் 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை தந்தார்கள். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் வெறும் 26 பந்தில் 58 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி 213 ரன்கள் குவித்தது.
பிறகு இலங்கை துவக்க ஆட்டக்காரர்களும் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்த இலங்கை அணி இந்திய அணிக்கு நெருக்கடியை உண்டாக்கியது. ஆனாலும் இலங்கை அணியின் கடைசி 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள். இதில் சூரியகுமார் யாதவ் 17ஆவது ஓவரில் ரியான் பராக்கை கொண்டு வந்தார். ரியான் பராக் அந்த நேரத்தில் மூன்று விக்கெட் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.
இதுகுறித்து போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “இது ரியான் பராக்கின் ஸ்பெஷலாக இருக்க முடியும் ஏனென்றால் நான் ஐபிஎல் தொடரில் அவர் வலைப் பயிற்சியில் பந்து வீசுவதை பார்த்திருக்கிறேன். இதன் காரணமாகத்தான் முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் எக்ஸ் ஃபேக்டர் இருப்பதாகவும் கூறியிருந்தேன்.
மேலும் பேட்டர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தால் பந்துவீச்சாளர்கள் மைதானத்தில் அவர்களுக்கு உதவி செய்தால், எல்லா வேலையுமே எளிதாகிவிடும். நிலைமை என்ன என்பதை கணித்து நான் ஆட்டத்தில் வேகத்தை அமைத்தேன். எங்களுக்கு பேட்டிங்கில் நல்ல ஆழம் இருக்கிறது. ஒருவேளை நாங்கள் சரியாக விளையாட விட்டால் மற்றவர்கள் வந்து சரியாக விளையாடி முடித்து விடுவார்கள்.
இதையும் படிங்க : எனக்கு அந்த விஷயத்தை கம்பீர் சார் ஏற்பாடு பண்ணிட்டார்.. திரைக்கு பின்னால் இந்த வேலை நடக்குது – ரியான் பராக் பேட்டி
நான் அணிக்கு கேப்டனாக இல்லாமல் லீடராக இருக்க விரும்புகிறேன். இங்கு இலங்கையிலும் எங்களுக்கு நல்ல ஆதரவை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இங்கும் இரண்டரை மணி நேரம்தான் வித்தியாசம். எனவே நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை போலவே உணர்கிறோம். இது போன்ற ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெறுவோம் என்று நம்புகிறோம். நாங்கள் தொடர்ந்து அடுத்த வேலைகளை கவனிப்போம்” என்று கூறி இருக்கிறார்.






