இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.
டி20 ஃபார்மேட்டில் இருந்து ரோகித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு தற்போது புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் சிறு வயது பயிற்சியாளர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி பல வருட ஏக்கத்திற்கு பிறகு சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்றது. அந்த உலகக் கோப்பையை வென்றதோடு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு டி20 அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கப் போவது யார்? என்ற கேள்வியும் சமீப நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கில் தலைமையிலான இளம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது. இனி அடுத்ததாக இந்தியா இலங்கை சென்று டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ள நிலையில் தற்போது புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 30 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சூரியகுமார் யாதவ் 33 வயதில் கேப்டன்சி பொறுப்பை ஏற்று இருப்பது அவரது திறமையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவின் சிறு வயது பயிற்சியாளர் அசோக் அஸ்வால்கர், வியாழன் அன்று சூரிய குமாருக்கு நல்ல செய்தி நடக்கப் போகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அது தற்போது நடந்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “வியாழனன்று மதியம் சூரிய குமாருக்கு ஒரு மகிழ்ச்சியான பெரிய செய்தி வரும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அன்று மாலையே அவர் டி20 அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு சற்று வித்தியாசமான ரோல் ஆகும். டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சிறந்த வீரர்களோடு சூரியகுமார் யாதவ் விளையாடி இருக்கிறார். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது” என்று அவரது சிறு வயது பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:பிளின்டாப் மகன் 16 வயதில் சதம்.. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனை.. புது சகாப்தம்
டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரது உடற்தகுதி காரணமாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சூர்யாவை கேப்டனாக அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திரும்பி இருப்பது ஒரு நல்ல விஷயமாகும்.






