ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தான் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றி சூரியகுமார் யாதவ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டு பல கேள்விகளுக்கு வெளிப்படையாகவே பதில் அளித்தார்.
மும்பை இந்தியன்ஸ்க்கு பிசிசிஐ தந்த ஆச்சரியம்
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என பலரும் நினைத்தது போல மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் இணைத்தது. எனவே அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கொண்டு வந்து தன்னுடைய அணியில் கேப்டன் ஆக்கியது. இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் வென்றது. அவரும் அத்துடன் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.
எனவே ஒருவழியாக ரோகித் சர்மாவிடமிருந்து தப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக உறுதியாக வருவார் என்று எதிர்பார்த்தது. இந்திய டி20 அணியின் கேப்டன் தங்கள் அணியின் கேப்டனாக இருப்பது எல்லா அணிகளுமே விரும்பும். இப்படியான நிலையில்தான் சூரியகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இப்பொழுது ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் நீக்கிவிட்டு சூரிய குமாரை கொண்டு வர மும்பை இந்தியன்ஸ் யோசிக்கிறதா? என்று தெரியவில்லை.
தெரிய வேண்டிய நேரத்தில் தெரியும்
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவிடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக அவரை நியமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : சாம்சனை கம்பீர் கைவிட மாட்டாரு..வேற திட்டம் இருக்கு.. இந்த வாய்ப்ப விட்றாதப்பா – ஆகாஷ் சோப்ரா அறிவுரை
இதற்கு பதில் அளித்து பேசிய சூர்யகுமார் யாதவ் “என்னை ஏன் இப்படி ஒரு கூக்ளில் நிற்க வைக்கிறீர்கள்? இப்பொழுது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை நான் ரசிக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்த பொழுது நான் என்னுடைய யோசனைகளை அவரிடம் தெரிவித்து வந்திருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது? என்று பார்ப்போம். உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல்கள் சொல்லப்படும்” என்று கூறியிருக்கிறார்.