நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்கு களத்தில் இறுதிவரை இருந்த தோனி மற்றும் சிவம் துபே இருவருக்கும் இந்திய டி20 அணியின் கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 5 தொடர் தோல்விகளுக்கு பிறகு லக்னோ அணிக்கு எதிராக விளையாட வந்தது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் சி எஸ் கே அணியும் கேப்டன் மகேந்திர சிங் தோனியம் இருந்தார்கள்.
மீண்டும் களத்திற்கு வந்த பினிஷர்
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சின் போது அணியின் உற்சாகம் சிறப்பான முறையில் இருந்தது. இத்துடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சாளர்களை மிகவும் சிறப்பான முறையில் ரொட்டேட் செய்து பயன்படுத்திக் கொண்டார். அவர் ரவீந்திர ஜடேஜாவை வைத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியது பழைய ஞாபகங்களை கொண்டு வந்தது.
இந்த நிலையில் லக்னோ அணி அதிரடியாக விளையாடுவது போல தெரிந்தாலும் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தாண்டி வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நேரத்தில் களத்தில் இருந்த மகேந்திர சிங் தோனி 11 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் அதிரடியாக 26 ரன்கள் எடுத்தார். இது அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது. உடன் விளையாடிய சிவம் துபே நிதானமாக ஒத்துழைப்பு கொடுத்தார்.
சூரியகுமார் யாதவ் வித்தியாச வாழ்த்து
இந்த நிலையில் போட்டியை இறுதிவரை களத்தில் நின்று வென்ற தோனி மற்றும் சிவம் துபே இருவருக்கும் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வரக்கூடிய ஒரு காட்சியை அப்படியே வைத்து சூரியகுமார் யாதவ் மிகவும் நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் தோனியை பெருமைப்படுத்தும் படியும் வாழ்த்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : பிஸ்னாய்க்கு கடைசியில ஓவர் தராதது என் முடிவு கிடையாது.. சிஎஸ்கே வெற்றிக்கு காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் பேச்சு
சூரியகுமார் வெளியிட்டுள்ள பதிவில்
“தோனி – நான் உனக்கு ஸ்ட்ரைக் கொடுத்தால் நீ போட்டியை வென்று விடுவாயா?”
“துபே – நான் முயற்சி செய்வேன்”
“தோனி – அந்த முயற்சியை என்னாலயே செய்ய முடியும். நீ என்னை ரன் அவுட் மட்டும் செய்து விடாதே”
என்பதாக தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் வரும் வசனத்தை நேற்றைய போட்டி சூழ்நிலையில் வைத்து பாராட்டி இருக்கிறார்.