360 டிகிரியில் குஜராத்தை சுத்த விட்ட சூரியகுமார் ; 49 பந்துகளில் அதிரடி மிரட்டல் சதம்!

0
530
Suryakumar

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்பொழுது மோதி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாக வந்த இசான் கிஷான் 31, ரோகித் சர்மா 29 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தைத் தந்தார்கள். ஆனால் ரஷீத் கானின் ஏழாவது ஓவரில் இருவரும் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த நெகில் வதேராவும் 15 ரன்னில் ரஷீத் கான் இடம் வீழ்ந்தார். இதனால் மூன்றாவது வீரராக களத்திற்கு வந்த சூரிய குமாரால் உடனடியாக அதிரடிக்குப் போக முடியவில்லை.

ஆனாலும் இந்த ஆட்டத்தில் புதிதாக மும்பை அணிக்கு பேட்டிங் செய்ய வந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு வினோத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவரோடு இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் அரை சதம் கடந்தார். இந்தக் கூட்டணி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. விஷ்ணு வினோத் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த டிம் டேவிட் ஐந்து ரன்னில் தேவையில்லாமல் ரஷித் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதற்கு நடுவில் ரன் தேவையை உணர்ந்து சூரியக்குமாரின் பேட் வாள் போல மைதானத்தின் எல்லா பக்கத்திலும் சுழன்று அடித்தது. எல்லோரும் திணறிய ரஷீத் கானையும் அவர் பவுண்டரிகளுக்கு அடித்தார்.

19 ஓவர் முடிவில் 87 ரன்கள் எடுத்திருந்த அவருக்கு சதத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அல்ஜாரி ஜோசப் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் இருந்து எதிர்கொண்ட அவர் ஐந்தாவது பந்து வரை சேர்த்து 97 ரன்களில் நின்றார்.

இந்த நிலையில் கடைசிப் பந்தில் சூரியகுமார் யாதவ் சதத்தை எட்டுவாரா என்கின்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் இருந்து மும்பை டக் அவுட் வரை பரவியிருந்தது. அல்ஜாரி ஜோசப் வீசிய அந்தப் பந்தை அசால்ட் ஆக ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார் சூரியகுமார் யாதவ்!

இறுதி வரை களத்தில் நின்ற சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 11 பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் குவித்தார். விக்கெட்டுகள் தேவையில்லாத நேரத்தில் விழாமல் இருந்திருந்தால், அவருடைய இந்த ஆட்டத்தில் சிக்ஸர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும்!