“என்னை இப்படி விளையாட வேண்டுமென்று சூரியகுமார் கேட்கிறார் ; நான் அதை செய்கிறேன்” – சூரியகுமாருடன் விளையாடுவது பற்றி விராட் கோலி!

0
2353
Viratkohli

தற்போது நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நாளை இந்திய அணி மிக முக்கியமான போட்டி ஒன்றில் மிக முக்கியமான எதிர் அணியான பாகிஸ்தான் அணியுடன் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது!

இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடம் எவ்வளவு இருக்கும் என்று அளப்பது மிகவும் கடினம். எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எதிர்பார்ப்பு எகிற எகிற இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி குறித்த கருத்துகளும் கணிப்புகளும் குவிந்து கொண்டே இருக்கிறது. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ஒரு லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் குழும இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது குறித்தும், சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது குறித்தும் விராட் கோலி தனது அபிப்ராயங்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விராட் கோலி கூறும்பொழுது ” விளையாட்டை விட, இலட்சம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் தருணத்தை நான் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடைசியாக ஈடன் கார்டன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நான் விளையாடி இருந்தேன். மேலும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது எப்பொழுதும் தனியானது. 2011 ஆம் ஆண்டு மொகாலியில் இதை நான் பார்த்தேன். உலகக்கோப்பை போட்டிகளில் பொதுவாக இப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு வித்தியாசமான சூழல் உள்ளது. இந்த பில்டப்பை நீங்கள் களத்தில் உணர முடியும். எதிர்பார்ப்பு மற்றும் மற்றவரின் சலசலப்பை நீங்கள் உணரமுடியும். நான் இந்த தருணங்களை விரும்புகிறேன். இந்தத் தருணங்களும் நம் அனுபவத்தின் ஒரு பகுதியாகும்” என்று கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது பற்றி பேசிய விராட் கோலி ” விக்கெட்டில் இருந்து வந்து எப்படி வருகிறது என்று என்னிடம் சூர்யகுமார் யாதவ் முதலில் கேட்பார். பின்பு இரண்டு மூன்று பந்துகள் பார்த்துவிட்டு அவர் உடனே அடிக்க ஆரம்பித்து விடுவார். நாங்கள் இணைந்து விளையாடும் பொழுது, அவர் அடித்து விளையாடும் வாய்ப்பை எடுத்துக் கொள்வதாகவும், நான் அவருடன் இருக்க வேண்டும் என்றும் கூறுவார். எனவே நான் அவருடன் இருக்கும் பொழுது வித்தியாசமான ரோலில் விளையாடுகிறேன். அது நன்றாக வேலை செய்வதால் அதை நான் விரும்புகிறேன் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்!