2022 ஐ.பி.எல் லீக் போட்டியின் ஐந்தாவது ஆட்டம் மஹாராஷ்ட்ராவின் புனேவில் நடந்து முடிந்திருக்கிறது. இப்போட்டியில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சனின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின!
முதலில் பேட் செய்த ரஜஸ்தான் அணி இருபது ஓவர்களின் முடிவில் பட்லர் 35 [28] சஞ்சு சாம்சன் 55 [27] படிக்கல் 41 [29] ஹெட்மயர் 33 [13] ஆகியோரின் பங்களிப்போடு 210 ரன்களை 6 விக்கெட் இழப்பிற்கு குவித்துள்ளது. ஹைதராபாத் பவுலர் புவனேஷ்வர் குமார் 29 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி பந்துவீச்சில் கோட்டை விட்டது போலவே பேட்டிங்கிலும் கோட்டை விட்டது. ஆடுகளம் வேகத்திற்கும், சூழல் ஸ்விங்கிற்கும் சாதகமாக இருக்க, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணாவும், டிரென்ட் போல்ட்டும் அதைப் பயன்படுத்தி அசத்தி விட்டனர்.
இவர்களின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த கேப்டன் சஞ்சு சாம்சன் பவர்-ப்ளேவின் ஆறு ஓவர்களையும் இருவரை மட்டுமே வைத்து வீசி முடித்துவிட்டார். இருவரும் சேர்ந்து பவர்-ப்ளேவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வெறும் 14 ரன்களை மட்டுமே அடிக்கவிட்டனர். 15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் பவர்-ப்ளேவில் மிகக்குறைந்த ஸ்கோர் இதுதான்.
பவர்-ப்ளேவில் மோசமான ஸ்கோர் செய்த முதல் ஐந்து அணிகள்:
தற்போது ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் 14/3
பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தான் 14/2
கொல்கத்தாவுக்கு எதிராக சென்னை 15/2
டெல்லிக்கு எதிராக சென்னை 16/1
பெங்களூருக்கு எதிராக கொல்கத்தா 17/4
முன்பு இந்த மோசமான சாதனையில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி, இப்போது ஹைதராபாத் அணியை அதைச் செய்ய வைத்து தப்பித்திருக்கிறது!