தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 14 வது ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்
செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் ஆரம்பித்த டர்பன் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. பிரண்டன் கிங் 0 மற்றும் பிரீக் 2 ரன்னில் வெளியேறினார்கள். அதற்குப் பின்னர் களம் இறங்கிய வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
ஆனால் அதற்கு பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே நடையை கட்டினார்கள். இறுதியாக நவீன் உல்ஹக் மட்டும் 15 பந்துகளை எதிர் கொண்டு 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 30 ரன்கள் எடுத்தார். இதனால் டர்பன் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் எடுத்தது. அதற்குப் பிறகு சன்ரைசர்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது.
சன்ரைசர்ஸ் அணி சிறப்பான வெற்றி
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவுலி 4 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெடிங்காம் அதிரடியான ஆட்டத்தை விளையாடினார். 20 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 195 ஸ்ட்ரைக் ரேட்டில் 39 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்களில் அபேல் 11 ரன், ஜோடன் 23 ரன், எடுக்க கேப்டன் மார்கரம் 20 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 31 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க:150 ஐபிஎல் போட்டிகள் ஆடிட்டேன்.. இப்போ யாருமே என்னை எடுக்கல.. இதான் காரணமா இருக்கும் – உமேஷ் யாதவ் வேதனை
இதனால் சன்ரைசர்ஸ் அணி 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியின் மூலமாக தனது இரண்டாவது வெற்றியும், டர்பன் அணி மூன்றாவது தோல்வியும் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற உள்ள 15 வது ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது






