ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்கு முதல் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்திருக்கும் ரஜத் பட்டிதார் குறித்து சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசி இருக்கிறார்.
இதுவரையில் ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறி வந்திருக்கிறது. அந்த அணிக்கு நட்சத்திர பிரபல வீரர்கள் பலர் கேப்டனாக இருந்தும் கோப்பையை வெல்ல முடியாத சோகம் தொடர்ந்து வந்தது.
மறுத்துவிட்ட விராட் கோலி
இந்த முறை ஆர்சிபி அணிக்கு மீண்டும் விராட் கோலியை கேப்டனாக கொண்டு வருவதற்கு ஆர்சிபி நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் விராட் கோலி தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்றும் இளம் வீரர்களில் ரஜப் பட்டிதாருக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாம் என்றும் ஆதரவு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி நிர்வாகம் ரஜத் பட்டிதாரை கேப்டனாக கொண்டு வந்தது. அவர் ஒரு கேப்டனாக களத்தில் இருந்த மூத்த வீரர்களுடன் சுமுகமான முறையில் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்தினார். மேலும் அணியில் தன்னை எந்த விதத்திலும் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. முழுமையான அணியின் வெற்றிக்கான கேப்டனாகவே அவர் செயல்பட்டு வந்தார். தற்போது இது குறித்து சுனில் கவாஸ்கர் பாராட்டி இருக்கிறார்.
அந்த பையனுக்கு ஈகோ இல்லை
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவரது கேப்டன்சி மிகவும் சுவாரசியமாக இருந்தது. உங்கள் அணியில் ஒரே சமயத்தில் பல நட்சத்திர வீரர்கள் இருக்கும் பொழுது அணியை சரியாக நிர்வகிக்க முடியுமா என்கின்ற சந்தேகம் உருவாகும். இருந்தாலும் அவர் மிகச் சிறப்பாக அணியை கொண்டு சென்று மூத்த வீரர்களிடமிருந்து ஆதரவு பெற்ற விதத்தை பார்க்கும் பொழுது அவரிடம் நல்ல தலைமை பண்பு இருப்பது தெரிகிறது”
இதையும் படிங்க : பைனலில் 4வது ஓவர்தான் பிரச்சனையே.. அனுபவம் இல்லாதது தான் தோல்விக்கு காரணமா? – ரிக்கி பாண்டிங் பதில்
“அவருக்கு எந்த ஈகோவும் இருப்பதாக தெரியவில்லை. களத்தில் மூத்த வீரர்களிடம் சென்று அவர்களுடைய அறிவுரையை கேட்டு அவர் எந்த தயக்கமும் இல்லாமல் செயல்பட்டார். அவர் தானாக சென்று கேட்ட விதத்தில் இருந்து அவருக்கு ஈகோ இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு கேப்டனுக்கு எப்பொழுதும் ஈகோ இருக்க கூடாது. அவர் அணிக்கு எது நல்லதோ அதைத்தான் செய்ய வேண்டும். அவர் அப்படித்தான் நடந்து கொண்டார்” என்று பாராட்டியிருக்கிறார்.






