இந்திய டெஸ்ட் அணியின் சுப்மன் கில் தற்போது செய்திருக்கும் ஒரு விஷயம் மற்ற வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்த அற்புதமான விஷயம் என சுனில் கவாஸ்கர் பாராட்டி இருக்கிறார்.
இந்திய இளம் டெஸ்ட் அணி கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என சமன் செய்து ஆச்சரியப்படுத்தியது. இதற்குப் பிறகு இந்திய அணி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது.
நடுவில் ரத்தான தொடர்
இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இந்த மாதம் நடைபெற வேண்டி இருந்த வங்கதேச சுற்றுப் பயணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்தது. மேலும் இந்த நேரத்தில் இலங்கைக்கு வெள்ளை பந்து தொடர் விளையாட செல்ல வேண்டும் என்ற அழுத்தத்தையும் நிராகரித்தது மிகவும் நல்ல விஷயம்”
“இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படி செய்ததின் மூலமாக அடுத்த நடைபெற இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலிப் டிராபிக்கு சிறந்த இந்திய வீரர்கள் பலரும் கிடைப்பார்கள். இதன் மூலம் இந்த தொடர் நல்ல போட்டி தன்மை கொண்டதாக மாறும். வீரர்களுக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும்”
கில் செய்தது சிறப்பான விஷயம்
“மேலும் கேப்டனாக 5 போட்டிகள் கொண்ட ஆறு வாரங்கள் விளையாட வேண்டிய நீண்ட டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு மாதம் ஓய்வு கேட்டிருந்தால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி இருந்தும் அவர் வடக்கு மண்டல அணிக்கு கேப்டனாக துலிப் டிராபியில் களம் இறங்குகிறார்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025.. இந்திய அணியில் யார் யாருக்கு இடம்?.. 3 ஸ்டார்களுக்கு இடமில்லை.. வெளியான புதிய தகவல்கள்
“இதன் மூலம் மற்ற வீரர்களும் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என மறைமுகமாக ஒரு சிக்னலை கொடுத்து விட்டார். உண்மையில் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்த விதம் மிகவும் அற்புதமானது பாராட்டப்பட வேண்டியது. அதே சமயத்தில் இங்கிலாந்தின் கோடை காலத்தில் கடுமையாக உழைத்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்திருப்பது நல்ல விஷயம்” என்று கூறி இருக்கிறார்.






