நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு மற்ற அணிகளின் பவுலர்கள் எப்படி பிரேக் போட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து மிகவும் வெளிப்படையாக சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி பேட்டிங் முறைக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய டெம்ப்ளேட்டை உருவாக்கியது. ஆனால் இந்த முறை பந்துவீச்சாளர்கள் அவர்களை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து மிகச் சிறப்பான முறையில் அந்த அணியை அடக்கி விட்டார்கள். எனவே அவர்கள் மீண்டும் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
சிவப்பு விளக்கை மதிக்காமல் போனார்கள்
இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “வேகம் என்பதில் ஏதோ இருக்கிறதுதானே? வேகம் என்பது நம்மை எப்பொழுதும் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் சில சமயங்களில் அது நம்மை கொன்று விடும். கடந்த ஆண்டு ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பவர் பிளேவில் அதைத் தாண்டி ரன்கள் குவிப்பதற்கு புதிய டெம்ப்ளேட்டை உருவாக்கினார்கள். அவர்கள் அசுர வேகத்தில் பேட்டிங் செய்தார்கள்”
“இதன் காரணமாக எதிரணியை ஆச்சரியத்தில் தள்ளினார்கள். மேலும் 300 ரன்கள் எடுப்பதற்கு மிக அருகில் வந்தார்கள். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடம்பரமான காரில் சாலையில் இருக்கும் சிவப்பு விளக்கை மதிக்காமல் கடந்து சென்றது போல மிக வேகமாக விளையாடினார்கள். அப்போது அவர்கள் பிடிபடாமல் இருந்தார்கள் என்பது போல்தான் எனக்கு இருந்தது”
இறுதியாக சிக்கிவிட்டார்கள்
“இந்த ஆண்டு முதல் போட்டியிலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிவப்பு விளக்கை தாண்டி பிடிபடாமல் சென்றார்கள். ஆனால் போக்குவரத்து காவல்துறை உஷாராகி புத்திசாலித்தனமாக பிடிப்பது போல, ஐபிஎல் தொடர்களின் பவுலர்களும் சரியான திட்டங்களுடன் வந்து அவர்களது வேகத்திற்கு சிறப்பான முறையில் பிரேக் போட ஆரம்பித்து விட்டார்கள்”
இதையும் படிங்க : சிஎஸ்கே வீரரின் சாதனை தூள் தூளானது.. புவனேஸ்வர் குமார் புதிய வரலாறு.. ஐபிஎல் தொடரில் அடுத்த அத்தியாயம்
” இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து விட்டது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை. இப்போது மெதுவான பந்துகளை வீசுகிறார்கள், மேலும் சில பந்துகளை கலந்து விலா எலும்பை குறி வைத்து வீசுகிறார்கள். இதனால் அவர்கள் டீப் ஸ்கொயர் ஃபீல்டரிடம் எளிதாக சிக்குகிறார்கள். மீண்டும் அவர்கள் வேகத்தை கண்டறிவதற்கு வேறு வகையை யோசிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






