கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர்த்து மகேந்திர சிங் தோனி விளையாட வைத்த காரணம் – ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

0
191
Stephen Fleming CSK vs DC Qualifier 1

நேற்று முதல் குவாலிபயர் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று டாஸ் வென்ற மகேந்திரசிங் தோனி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் வந்து களமிறங்கிய சென்னை அணி ஓபனிங் வீரர் டு பிளசிஸ் விக்கெட்டை இழந்ததும், சற்று நிதானமாக விளையாட தொடங்கியது. பின்னர் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை அணிக்கு சாதகமாக போய்க்கொண்டிருந்தது.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்னரே வந்து விளையாடிய மகேந்திர சிங் தோனி

இறுதி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற, சென்னை அணி தோல்வி அடைந்து விடுமோ என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் ஒரு கட்டத்தில் எழுந்தது. கடைசி 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி தடுமாறிய போது, ருத்ராஜ் அவுட்டானார்.

நிச்சயமாக அடுத்து ரவீந்திர ஜடேஜா தான் பந்து விளையாடப் போகிறார் என்று அனைவரும் நம்பிக்கையாக இருந்த நிலையில், திடீரென மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான பார்மில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவை தவிர்த்து நல்ல டச்சில் இல்லாத மகேந்திர சிங் தோனி எதற்கு களமிறங்கினார் என்கிற கேள்வியும் அனைவருக்கும் இருந்தது.

அவர்கள் அனைத்து கேள்விக்கும் தனது பேட் மூலம் மகேந்திர சிங் தோனி நேற்று பதிலளித்தார். ஆவேஷ் கான் வீசிய முதல் பந்தை அடிக்காத தோனி, அடுத்த பந்தில் சிக்சர் அடித்தார். இறுதியில் டாம் கரன் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் போட்டியை முடித்துவிட்டார். 6 பந்துகளில் 18 ரன்கள் குவித்து சென்னை அணியை “வின்டேஜ் மகேந்திர சிங் தோனி” வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி முன்னரே வந்து விளையாடிய காரணம் இதுதான்

மகேந்திர சிங் தோனி எதற்காக முன்னரே வந்து விளையாடினார் என்கிற காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தற்போது கூறியுள்ளார். சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருப்பதை மகேந்திர சிங் தோனி தீவிரமாக ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார். எங்களுக்குள் நிறைய உரையாடல் நிகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் ருத்துராஜ் அவுட் ஆனதும் நான் களம் இறங்கப் போகிறேன் என்று அவர் சொன்னார். எந்தவித யோசனையும் இன்றி நான் அதற்கு சம்மதித்தேன். மகேந்திர சிங் தோனி எப்பேர்பட்ட ஃபினிஷர் என்பது அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் சென்னை அணிக்கு பல போட்டிகளில், இறுதிநேரத்தில் மகேந்திரசிங் தோனி தனது ஃபினிஷிங் மூலம் வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். எனவே அவரது முடிவுக்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.

நான் அவர் மீது வைத்த நம்பிக்கையை நேற்று நிறைவேற்றினார். இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல. நேற்று அவர் ஆடிய விதம் மனதிற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை வரவழைத்தது என்று நெகிழ்ச்சியுடன் ஸ்டீபன் பிளமிங் கூறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள சென்னை அணி வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி இதே துபாய் மைதானத்தில் இறுதிப் போட்டி விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.