இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் அஞ்சலோ மேத்யூஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன், ஜூன் 17 ஆம் தேதி காலேயில் தொடங்கவிருக்கும் இந்தப் போட்டியுடன், அவர் சிவப்பு பந்து வடிவத்தில் இருந்து விடைபெறுவார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த அறிவிப்பை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்தார். “எனது அன்பு நண்பர்களே, குடும்பத்தினரே, நன்றியுடன் மறக்க முடியாத நினைவுகளுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் விடை கொடுக்கிறேன்! கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீலங்காவுக்காக கிரிக்கெட் விளையாடியது எனது மிக உயர்ந்த கௌரவமும் பெருமையுமாகும்.”
“தேசிய அணியின் உடையை அணிவதற்கு இணையான உணர்வு எதுவுமில்லை. கிரிக்கெட்டுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்தேன். அதற்கு பதிலாக கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் தந்து, இன்றைய நான் உருவாக காரணமாக இருந்தது.எனது தொழில் வாழ்க்கையில் உயர்ந்த மற்றும் தாழ்ந்த தருணங்களில் என்னை ஆதரித்த ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரசிகர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”
மேத்யூஸ் டெஸ்ட் ரெக்கார்ட்:
“வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனது நாட்டுக்காக சிவப்பு பந்து வடிவத்தில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேத்யூஸ், ஸ்ரீலங்காவை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த நாட்டின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய அவர் தற்போது 8,167 ரன்களை 44.62 என்ற சராசரி வைத்திருக்கிறார்.
பந்துவீச்சில் 33 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கனா ஹேரத் போன்ற வீரர்களுடன் இணைந்து பந்து வீசியுள்ளார். மேலும், 34 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தினார். காலேயில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான அவர், அதே மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக தனது கடைசி போட்டியை விளையாடவுள்ளார்.
ஒருநாள், டி20யில் பங்கேற்பு:
இதன்மூலம் அவரது 17 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கை ஒரு முழு வட்டமாக முடிவடைகிறது. இந்த சூழலில் “டெஸ்ட் வடிவத்துக்கு விடை கொடுக்கும் அதேவேளையில், தேர்வாளர்களுடன் கலந்துரையாடியபடி, ஒருநாள் டி20யில் தொடர்ந்து விளையாடுவேன் என்று உறுதியளிக்கிறேன். இந்த டெஸ்ட் அணி திறமையானது, தற்போதைய மற்றும் எதிர்கால மாபெரும் வீரர்களைக் கொண்டுள்ளது.”
இதையும் படிங்க: தோனி பாய் எனக்கு சொன்ன 5 செகண்ட் அறிவுரை.. மொத்தத்தையும் முடிச்சு விட்டுட்டார் – உர்வில் படேல் பேட்டி
“இளைய வீரர்களுக்கு வழிவிட இதுவே சிறந்த தருணம் என்று நினைக்கிறேன். கடவுளுக்கு, எனது பெற்றோருக்கு, அழகான மனைவிக்கு, அற்புதமான குழந்தைகளுக்கு, குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் என்னை நம்பி, ஆதரித்து, என்னுடன் நின்றார்கள்,” மேத்யூஸ் கூறியுள்ளார்.
“ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் எனது தொழில் வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் எனது சிறப்பு நன்றியைத் தெரிவிக்கிறேன். ஒரு அத்தியாயம் முடிகிறது, ஆனால் கிரிக்கெட் மீதான காதல் எப்போதும் நீடிக்கும்,” 37 வயதான மேத்யூஸ் உணர்ச்சிப்பூரமாக கூறியுள்ளார்.






