இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று இருந்தன.
காப்பாற்றிய மிடில் ஆர்டர்
வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் டாஸ் வென்று சரியாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் கோல்டன் டக் அடிக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப் 25 பந்தில் 18, ரோஸ்டன் சேஸ் 13 பந்தில் 8, ரூதர்போர்டு 5 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இந்த நிலையில் மிடில் ஆர்டரில் வந்த கேப்டன் ரோமன் பவல் 27 பந்தில் 37 ரன்கள், குடகேஷ் மோட்டி 15 பந்தில் 32 ரன்கள், ரோமரியோ ஷெப்பர்ட் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இலங்கை பந்துவீச்சில் தீக்சனா மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இலங்கைக்கு மாஸ் காட்டிய டாப் ஆர்டர்கள்
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 22 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் 50 பந்தில் 68 ரன்கள், குசால் பெரேரா 36 பந்தில் 55 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : ரோஹித் டீம் அவர நம்பாம.. கேஎல் ராகுலுக்கு அதை செஞ்சு.. விராட் இப்போ மாட்டிக்கிட்டாரு – ஆகாஷ் சோப்ரா பேட்டி
இதைத் தொடர்ந்து இலங்கை அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையே அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.






