இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 100 ரன்கள் எடுத்தால் இலங்கை அணியால் போட்டியை சுவாரசியப்படுத்த முடியும்.
முதல் இன்னிங்ஸ்
இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி தைரியமாக பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா 74 ரன்கள், மிலன் ரத்னாயகே 72 ரன்கள் எடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பசீர் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் மூன்றாவது நாளில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் 111 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாடோ நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
போராடும் இலங்கை அணி
இதைத் தொடர்ந்து 142 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. மீண்டும் இலங்கை டாப் ஆர்டர் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தாக்குப்பிடித்து விளையாடி 145 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.
இன்னொரு முனையில் நிலைத்து இன்று அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 109 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடன் தினேஷ் சண்டிமால் 28 பந்தில் 20 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.
இதையும் படிங்க: ஸ்கூல்ல கூட நடக்கல.. இந்திய டீம்ல சஸ்பெண்ட் பண்ணாங்க.. என்ன மொத்தமா மாத்திடுச்சு – கேஎல் ராகுல் ஓபன் டாக்
இன்று மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து 82 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இலங்கை அணி மேற்கொண்டு நாளை கொஞ்சம் சிறப்பாக விளையாடி 200 ரன்கள் டார்கெட் கொடுத்தால் போட்டி சுவாரசியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் வாகன் 200 ரன் டார்கெட் என்றால் இலங்கை வெல்லும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.