இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி அபாரமான முறையில் பந்துவீச்சில் செயல்பட்டு 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது!
இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் போட்டி டை ஆகியிருந்த காரணத்தினால் இரண்டு அணிகளுமே இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்கின்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 62 பந்தில் 40 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 44 பந்தில் 40 ரன்கள், வெல்லாலகே 35 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து போட்டியை வென்று ஆக வேண்டிய நிலையில் களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 44 பந்தில் 64 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். மேலும் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. இதற்குப் பிறகு இந்திய அணி அப்படியே ஒட்டுமொத்தமாக சரிந்தது.
இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் 44 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து விராட் கோலி 19 பந்தில் 14 ரன், சிவம் துபே 4 பந்தில் ரன் ஏதும் இல்லாமல், ஸ்ரேயாஸ் ஐயர் 9 பந்தில் 7 ரன், கேஎல்.ராகுல் 2 பந்தில் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார்கள். இந்த ஆறு விக்கட்டையும் அசரங்காவுக்கு பதிலாக வந்த வாண்டர்சே கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் 61 பந்தில் 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்வது போல தெரிந்தது. ஆனால் அக்சர் படேல் 44 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரும் 40 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து சிராஜ் 18 பந்தில் 4 ரன்கள், அர்ஸ்தீப் சிங் 4 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இந்திய அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தரப்பில் ஜெஃப்ரி வாண்டர்சே 33 ரன்கள் மட்டும் தந்து ஆறு விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் சரித் அசலங்கா இந்த போட்டியிலும் இந்திய அணியின் கடைசி விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : இலங்கை டெஸ்ட் : இங்கிலாந்து அதிரடியான அணி அறிவிப்பு.. 2 முக்கிய வீரர்கள் காயத்தால் விலகல்.
இந்திய அணி கடைசி 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து இருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 வருடங்களுக்குப் பிறகு முதலில் பேட்டிங் செய்து இந்திய எதிராக இலங்கை அணி வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு போட்டிகளாகவும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழல் பந்து வீச்சுக்கு தடுமாறும் விதம் இந்திய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!






