கடந்த ஐ.பி.எல் சீசனின் படுதோல்வியைச் சந்தித்து இருந்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்தத் தொடருக்குள்ளயே டேவிட் வார்னரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு, அவர் ஆடும் அணியிலிருந்து நீக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்களையும் சுமந்தார். பின்பு மைதானத்தில் கொடி அசைக்கும் நிலைக்கும் போனார். அணி நிர்வாகத்திற்கும் அவருக்குமான உரசல்கள் வெளிப்படையாகவே தெரிந்தது.
இந்த நிலையில் இந்த வருட ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஹைதராபாத் அணி நிர்வாகம் டேவிட் வார்னரை தக்க வைக்காமல் விட்டது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியசம்னை 14 கோடிக்குத் தக்கவைத்து அவரை கேப்டனாகவும் ஆக்கியது. நடந்து முடிந்த ஏலத்திலும் நல்ல வலிமையான அணியையே உருவாக்கியது.
இந்த வருட ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் விக்கெட்டுகளை சீக்கிரம் சரியவிட்டு இரண்டு தோல்விகளைச் சந்தித்த ஹைதராபாத் அணி, அடுத்து ஐந்து ஆட்டங்களை வென்று அசத்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையாக ஆடுவது என்று திட்டம் வகுத்து இந்த ஐந்து வெற்றியைக் கொண்டுவந்தது ஹைதராபாத் அணி நிர்வாகம்.
ஆனால் வெற்றியைத் தந்த இந்தத் திட்டமே அடுத்து தொடர் ஐந்து தோல்விகளுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. கேப்டன் கேன் வில்லியம்சனின் மந்தமான ஆட்டம், அணியின் வெற்றிக்கு உதவவில்லை. இந்தத் தொடரில் மொத்தம் 13 ஆட்டங்களில் 216 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் கேப்டன் கேன் வில்லியம்சன். ஹைதராபாத் அணியின் ப்ளேஆப்ஸ் வாய்ப்பும் மிக மங்கலாகவே இருக்கிறது.
இந்தச் சூழலில் கேன் வில்லியம்சன் தொடரை விட்டு நாடு திரும்புகிறார் என்று ஹைதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் “எங்கள் கேப்டன் சொந்த நாட்டிற்கு திரும்புகிறார். அவரது குடும்பத்தில் ஒருவர் இணையபோகிறார். ஒட்டுமொத்த ஹைதராபாத் அணியும் கேன் வில்லியசம்னுக்கும், அவரது மனைவிக்கு சுகப்பிரசவம் நடக்கவும் வாழ்த்துகிறது, நிறைய சந்தோசங்கள் வரட்டும்” என்று வாழ்த்தி இருக்கிறது. ஹைதராபாத் கேப்டன் தன் மனைவிக்குப் பிரசவம் நடக்க இருப்பதையொட்டி நாடு திரும்புகிறார்!