சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் அனைத்து தேசிய அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளன. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை தொடரில் பங்கேற்கவுள்ள 8 நாடுகளும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்ததன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வான வீரர்கள் இனி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அறிமுக வீரரான ப்ரீட்ஸ்கி – கேப்டன் பவுமா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 37 ரன்கள் சேர்த்த நிலையில், பவுமா 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஜேசன் ஸ்மித் உடன் இணைந்து ப்ரீட்ஸ்கி அதிரடியாக ரன்களை விளாசினார்.
எதிர்முனையில் நின்ற வீரர்களில் முல்டர் மட்டும் கம்பெனி கொடுக்க, 128 பந்துகளில் அறிமுக வீரரான ப்ரீட்ஸ்கி சதம் விளாசி அசத்தினார். இதன்பின் அதிரடிக்கு திரும்பிய அவர், ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். இறுதியாக 146 பந்துகளில் 5 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே 150 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ப்ரீட்ஸ்கி படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1978ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 148 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை ப்ரீட்ஸ்கி முறியடித்துள்ளார்.
அதேபோல் அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசிய 18வது சர்வதேச வீரர் என்றும், தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இவருக்கு முன்பாக காலின் இங்ரம், பவுமா மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகிய 3 பேரும் அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 42 ரன் தேவை.. கைவசம் 5 விக்கெட்.. திடீரென சர்துல் தாகூர் செய்த மேஜிக்.. சூரியகுமார் ரகானே ஆறுதல்
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில் ப்ரீட்ஸ்கி தேர்வு செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணியில் சோர்சி மற்றும் ரிக்கல்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக தேர்வாகி இருக்கின்றனர். இருப்பினும் நாளை வரை அணியில் மாற்றம் செய்ய முடியும் என்பதால், கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.