இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மோசமாக சரிந்த இலங்கை
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. டெம்பா பவுமா 72 எடுத்தார். அஷிதா பெர்னாடோ, லகிரு குமாரா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மார்க்கோ யான்சென் 7 விக்கெட் கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டப்ஸ் 122, டெம்பா பவுமா 113 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. விஷ்வா பெர்னாடோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
ஆஸியை கீழே இறக்கிய தென் ஆப்பிரிக்கா
இதைத்தொடர்ந்து இலங்கை 516 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி 282 எடுத்து ஆல் அவுட் ஆனது. சண்டமால் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்க்கோ யான்சென் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணியை கீழே இறக்கி இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு இடங்களை விட்டு வெளியே வந்திருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீருக்கு எல்லாரும் அநீதி செஞ்சிங்க.. இப்ப அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கு – அஜய் ஜடேஜா விமர்சனம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு போட்டியிடும் ஐந்து அணிகளின் பட்டியல்:
இந்தியா – 61.11
தென்னாப்பிரிக்கா – 59.26
ஆஸ்திரேலியா – 57.69
நியூசிலாந்து – 54.55
இலங்கை – 50.00