இன்று இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 159 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
மீண்டும் விக்கெட் சரிவுகள்
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்கள் எடுத்து மீண்டும் ஆல் அவுட் ஆனது. அதே சமயத்தில் கேப்டன் டெம்பா பவுமா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 56 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா படுதோல்வி
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மோசமாக விளையாடியது போலவே விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 31 மற்றும் அக்சர் படேல் 26 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி பரிதாபமாக 93 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீண்டும் சைமன் ஹார்மர் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க : தோனி இந்த வீரரை நிச்சயம் வாங்க மாட்டார்.. இவர்தான் சிஎஸ்கேவுக்கு வருவார்.. அதுக்கு இதை செய்யணும் – அஸ்வின் கருத்து
இந்திய அணி நிர்வாகம் கொல்கத்தா ஆடுகளத்திற்கு தொடர்ந்து நான்கு நாட்கள் தண்ணீர் ஊற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கங்குலி தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே ஆடுகளம் மிகவும் வறண்டு சுழல் பந்து வீச்சுக்கு மிகவும் ஒத்துழைப்பதாக மாறியது. இப்படியான ஆடுகளங்களில் இந்திய அணி தடுமாறி வருவது தெரிந்தும், இது போன்ற ஆடுகளத்தை அமைத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.






