தென்ஆப்பிரிக்கா டி20 தொடர்.. ரோகித் கோலியை எடுக்காத காரணம் இதுதான்.. இந்திய பவுலிங் கோச் அதிரடி பேட்டி!

0
714
Rohit

இந்திய அணி தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடுகிறது.

டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள கில் டி20 தொடரில் விளையாடுகிறார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது போட்டிக்கு திரும்பிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை மூன்று போட்டிக்குமான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் காரணமாக, இந்திய பேட்டிங் வரிசை எப்படி அமைக்கப்படும் என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கும். துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் சிறப்பான ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரன் மெஷின் விராட் கோலி இருவரும் விளையாட விரும்பவில்லை என்பதாக கூறப்பட்டது. அதே சமயத்தில் இவர்கள் இருவரையும் மேற்கொண்டு இந்திய டி20 அணியில் வைத்திருக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை என்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறும் பொழுது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் காரணமாக, இருநாட்டு டி20 தொடர்கள் முக்கியம் கிடையாது என்று அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு வீரரும் பேலன்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்றுதான் கூறுகிறேன்.

அதுவும் நாம் யாரைப் பற்றி பேசுகிறோம் என்பது தான் முக்கியம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் டி20 கிரிக்கெட்டை எல்லா ஏரியாக்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.

அதே சமயத்தில் இளம் வீரர்கள் இருதரப்பு தொடர்களில் இந்தியாவுக்காக எப்படி தகவமைகிறார்கள்? அவர்களின் விளையாட்டு விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? மாறுபட்ட சூழ்நிலைகளில் ஒத்துப்போய் அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறார்கள்? என்பது குறித்து பரிசோதிக்க வேண்டி இருக்கிறது.

வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று நான் எப்பொழுதும் கூற மாட்டேன். எந்த ஒரு இளம் வீரர்களிடம் கேட்டாலும் அவர்களின் லட்சியமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது இருக்கும்.

சில வீரர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி தங்களுடைய ஆட்டத்திறன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு நன்றாக பொருந்தும் என்பதால் மாறுவார்கள். இது விதிவிலக்காக நடக்கும். ஆனால் எந்த வீரரும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்ப மாட்டார்கள் என்று கூற முடியாது!” என்று கூறியிருக்கிறார்!