இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்ல் தென் ஆப்பிரிக்க அணி 549 ரன்கள் பிரம்மாண்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
தற்போது அசாம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய அணி தடுமாற்றம்
இந்த நிலையில் பேட்டிங் செய்வதற்கு சாதகம் இருந்தும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 58 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்தார்கள். பெண் ஆப்பிரிக்க தரப்பில் மார்க்கோ யான்சன் ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 78.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்தார். ஜடேஜா நான்கு விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா சீக்கிரம் டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதலாக 20 ஓவர்கள் விளையாடி இரக்கமே இல்லாமல் இந்திய வீரர்களை சோதித்தது.
இந்திய அணி டிரா செய்யுமா?
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியாக ஜெய்ஸ்வால் தேவையில்லாத ஷாட் விளையாடி 13 ரன்னிலும், கே எல் ராகுல் சிறப்பான பந்தில் ஆறு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் சாய் சுதர்சன் 2, குல்தீப் யாதவ் 4 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் எட்டு விக்கெட் கைவசம் இருக்கிறது.
இதையும் படிங்க : சச்சினும் கோலியும் உங்க இடத்துலதான் பேட்டிங் செஞ்சாங்க.. அதை மனசுல வச்சுட்டு விளையாடுங்க.. இளம் வீரருக்கு முன்னாள் வீரர் அறிவுரை
இந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் பந்தை மெதுவாக வீசினால் நல்ல சாதகம் கிடைக்கிறது. இதை இந்திய ஸ்பின்னர்களால் செய்ய முடியாததால் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்தார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள் சிறப்பாக மெதுவான முறையில் வீசுகிறார்கள். எனவே இந்திய அணி டிரா செய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






