“ஞாயிறு தென் ஆப்பிரிக்கா வேற மாதிரி வரப்போகுது” – இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் லான்ஸ் குளூஸ்னர்!

0
5865
Ind vs Sa

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பிரதான சுற்று நடைபெறுகிறது.

இதில் 13வது அணியாக மழை கலந்து கொண்டு தனியாக ஒரு ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தக் காரணத்தால் இரு குழுக்களிலும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

- Advertisement -

குழு 1ல் இங்கிலாந்து அணி மழையின் காரணமாக அயர்லாந்து அணியிடம் டக்வார்த் லிவீஸ் விதிப்படி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து ஆப்கான் ஆட்டம் தடைபட்டு போனது. தற்பொழுது ஆஸ்திரேலியா இங்கிலாந்து மோதும் மிகப்பெரிய போட்டி தடைபட்டு போனது. இந்தக் காரணத்தால் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆறு அணிகளுமே இன்னும் அரையிறுதி வாய்ப்பில் தொடர்கின்றன.

குழு 2ல் தென்னாபிரிக்கா ஜிம்பாப்வே மோதிய ஆட்டம் மழையால் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது தென்னாபிரிக்க அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியதால், இந்தக் குழுவில் நான்கு அணிகள் இன்னும் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன.

இந்த நிலையில் குழு 2ல் இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் பெர்த் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கின்றன. இந்தப் போட்டி இந்திய அணிக்கு விட தென் ஆப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியப் போட்டியாகும். காரணம் ஜிம்பாப்வே அணி உடன் மழையால் ஒரு புள்ளியை தென்னாப்பிரிக்க அணி இழந்து இருக்கிறது. இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்றால் அதற்கடுத்து நடைபெறும் இரண்டு ஆட்டத்தில் ஒரு ஆட்டத்தில் வென்றால் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். மேலும் இதற்கடுத்து இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் தான் மோத இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் பிரபல வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் லான்ஸ் குலுஸ்னர் இந்திய அணிக்கு மிக முக்கியமான விஷயம் ஒன்றை தெரிவித்திருக்கிறார். அடுத்து போட்டி நடக்கும் பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி அவர் கூறும் பொழுது “டுவைன் பிரிட்டோரியஸ் காயம் தென்னாபிரிக்க அணியின் சமநிலையை பாதிக்கும். தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் மோதிக் கொள்ளும் ஆட்டத்தில் இருக்கப் போகின்ற விஷயம். பெர்த் மைதானத்தில் நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை நாம் பார்க்கலாம். சுழற் பந்துவீச்சாளர் சம்ஸி பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்தது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த முறை சிறிய அணிகள் பெரிய அணிகளை அபாரமாக வீழ்த்தி வருகின்றன. இது இத்தோடு முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் என்னை வருத்தம் அடைய வைக்கும் ஒரே விஷயம் மழை தான். மழையின் காரணமாக இரண்டு பெரிய போட்டிகள் நடைபெறாமல் போனது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று கூறியிருக்கிறார்.