இந்தியா,தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, ஷுப்மன் கில்லின் பணிச்சுமை மற்றும் அனைத்து வடிவங்களிலும் விளையாடுவதன் மூலம் எற்படும் சவால் குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் பேசியுள்ளார். சமீபத்தில் டி20 அணியிலும் துணைக் கேப்டனாக திரும்பினார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக சுப்மன் கில்லுக்கு ஒருநாள் கேப்டன்ஷிப் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரோஹித் ஷர்மாவிடமிருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தற்பொது 6 நாள் இடைவெளியில் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதனால், கில்லின் பணிச்சுமை மேலாண்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய ரியான் டோசெட், “அனைத்து வடிவங்களிலும் விளையாடுவது மிகவும் சவாலானது. அதனால்தான் அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்கள் குறைவாகவே உள்ளனர். ஷுப்மன் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு தயாராக உள்ளார். சிறுவர்கள் இந்த சவாலுக்கு நல்ல உடல்நிலையில் இருக்க பெரும் உழைப்பை செலுத்துகின்றனர்,” என்று கூறினார்
ஜூன் 2025-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் கேப்டன்ஷிப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, கில் 7 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடையில் குறைந்த ஓய்வுகளுடன். இதற்கு முன்னதாக, 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார் மற்றும் இந்தியாவின் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் பங்காற்றினார்.
இதனை தொடர்ந்து பேசிய ரியான் டோசெட், நியூசிலாந்து தொடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம் என்று கூறினார். இந்திய அணி கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாது என உறுதிப்படுத்திய அவர், கடந்த ஆண்டு இந்தியாவில் 3-0 என்று வென்ற வரலாற்று நியூசிலாந்து அணியைப் போன்று தென்னாப்பிரிக்கா ஒத்த டெம்ப்ளேட்டை பின்பற்றும் என ரியான் டென் டோஸ்கேட் கணித்தார்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு சேப்பாக்கம் செட் ஆகாது.. ஜடேஜாவுக்கு ஜெய்ப்பூர் சரி வராது.. முன்னாள் வீரர் கருத்து
“தென்னாப்பிரிக்கா மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். இங்கு விளையாடும்போது இது ஒரு சவால். இது நல்ல சவாலாக இருக்கும். நியூசிலாந்து தொடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். தென்னாப்பிரிக்க சவாலை எதிர்கொள்வோம்” என்று கூறினார். இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7-ஐ வென்றுள்ளது. மற்றொன்று டிராவாக முடிந்தது. தென்னாப்பிரிக்கா இந்தியாவில் கடைசியாக டெஸ்ட் வென்றது 2010-ல், நாக்பூரில் ஆகும்.