ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை பெற்று, அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை வழங்குவது குறித்து
முன்னாள் இந்திய தொடக்க வீரர் சதாகோபன் ரமேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார். IPL 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த பரிமாற்ற ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சென்னையின் சுழல்பந்து சாதகமான ஆடுகளங்களில் சாம்சன் ரன் குவிக்க முடியுமா என ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் அவரது IPL சாதனை மோசமாக உள்ளது. 31 வயதான இவர், அந்த மைதானத்தில் 5 போட்டிகளில் சராசரியாக 11.80 மட்டுமே எடுத்துள்ளார்.
சாம்சனுக்கு செட் ஆகாது:
இது குறித்து பேசிய சடகோபன் ரமேஷ், “சஞ்சு சாம்சனுக்கு சேப்பாக்கத்தில் சிறந்த ரெக்கார்ட் இல்லை. ஆனால் இது சிறிய சாம்பிள் அளவு என்பதால், அங்கு தொடர்ந்து விளையாடினால் அவர் நன்றாகவே செயல்படுவார். இருப்பினும், சுழல்பந்து ஆடுகளங்களில் அவரது பேட்டிங்கில் ஒரு கேள்விக்குறி உள்ளது.”
“ஜடேஜா சுழல்பந்து ஆடுகளங்களில் தடுக்க முடியாத பந்துவீச்சாளர். ஆனால் சாம்சன் அத்தகைய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, ஜடேஜாவை விடுவது சிஎஸ்கே அணியை நிச்சயம் பலவீனப்படுத்தும். ஆனால் சஞ்சுவை பெறுவது அவர்களை பலப்படுத்துமா என்பது புரியவில்லை.”
“அதேபோல், ராஜஸ்தானில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளங்கள் இருப்பதால் ஜடேஜாவும் அங்கு சவால் எதிர்கொள்ள நேரிடும்.” என தெரிவித்தார். கடந்த 8 ஐபிஎல் சீசன்களாக சாம்சன் மற்றும் ஜடேஜா முறையே ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகளின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
சேப்பாக்கத்தின் தளபதி:
2016 மற்றும் 2017-ல் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகள் தடை செய்யப்பட்டபோது, அவர்கள் முறையே டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளில் 2 ஆண்டுகள் விளையாடினர். 36 வயதான ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு 2018, 2021 மற்றும் 2023 ஆகிய மூன்று IPL பட்டங்களிலும் வென்றெடுக்க முக்கிய பங்காற்றினார். “ஜடேஜா குறிப்பாக CSK-க்கு சேப்பாக்கத்தின் மிகப்பெரிய தளபதி. அவர் தனியாக பல போட்டிகளை CSK-க்கு வென்றுகொடுத்துள்ளார்.”
இதையும் படிங்க: 15 வருட பசி.. உலக சாம்பியன் நாங்க இந்திய அணியை விட மாட்டோம்.. ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் – கேசவ் மகாராஜ் சவால்
“அவரது ஒட்டுமொத்த எண்ணிக்கைகள் பிரமிக்க வைக்காவிட்டாலும், பல முக்கிய தருணங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.மேலும் அவரது ஃபீல்டிங் மற்றும் கேட்சிங் மூலம் சிஎஸ்கேக்கு கூடுதலாக 200-300 ரன்களை தடுத்திருப்பார். அவரது உடற்தகுதியுடன் இன்னும் எளிதாக 2-3 ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட முடியும்,” என ரமேஷ் கூறினார்.






