நாளை இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேசியிருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் கவுகாத்தி மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இல் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை வெல்லும் முனைப்புடன் களம் இறங்க இருக்கிறது. இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
நட்சத்திர வீரர் விலகல்
நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தங்கள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் நாளை போட்டி நடைபெற இருக்கும் அசாம் கவுகாத்தி மைதானத்தின் ஆடுகளம் கொல்கத்தா ஆடுகளத்தை விட புத்துணர்ச்சியாக தெரிவதாகவும், சுழல் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வருவதற்கு முன்பாக முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய நல்ல முறையில் இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆடுகளத்தின் தன்மை
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேசும்பொழுது “இந்த ஆடுகளம் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. மேலும் கொல்கத்தா ஆடுகளத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த ஆடுகளம் நிலையாக மாற்றம் அடையாமல் காணப்படும் என்று தோன்றுகிறது. ரபாடா குறித்து காலையில் ஒருமுறை பார்த்துவிட்டு மாற்றை பற்றி யோசிப்போம்”
இதையும் படிங்க : இனி நாம் சிஎஸ்கே குடும்பம்.. ருதுராஜ் கேப்டன், ஆனால் நான் லீடர்.. சஞ்சு சாம்சன் உற்சாகம்
“மேலும் இந்த ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளே வந்து சிறப்பாக செயல்படுவதற்கு முன்பாக, முதல் இரண்டு நாட்களுக்கு பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆடுகளம் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






