சஞ்சு சாம்சன் அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடுவது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ருதுராஜ் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும், அவர் தலைமையில் விளையாடுவதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
ஐபிஎல் 2021க்கு முன்பாகவே சிஎஸ்கே ருதுராஜ் கெய்க்வாடை தக்கவைத்தது. அந்த சீசனில் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்து அணியின் கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 2023இல் மீண்டும் கோப்பையை வென்ற சிஎஸ்கேயில் ருதுராஜ் 15 இன்னிங்ஸ்களில் 590 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ருதுராஜை புகழ்ந்த சாம்சன்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணுக்கு ஈடாக சிஎஸ்கேவுடன் டிரேடு செய்தது. இதனால் ஐபிஎல்லில் முதல்முறையாக சாம்சன் – ருதுராஜ் ஒரே அணியில் இணையவுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் சாம்சனின் நேர்காணல் வீடியோவைப் பகிர்ந்தது.
அதில் அவர் ருதுராஜுடனான நட்பு குறித்துப் பேசினார்.
“ருது எனக்கு நல்ல நண்பர். அவரது தலைமையில் விளையாட ஆசைப்படுகிறேன். ஒரு தலைவராக அவரோடு இருக்க விரும்புகிறேன்” என்று சஞ்சு கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு கேப்டனாக வழிநடத்தினார்.
இனி சிஎஸ்கே குடும்பம்:
ஆனால் சிஎஸ்கேயில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்க மாட்டார். 2026 சீசனுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டன் என சிஎஸ்கே ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது.
ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கேயில் இணைந்தது பெரிய அதிர்ஷ்டம் என்று சாம்சன் கூறினார். அணியில் தோனி உள்ளிட்ட பல நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப் பெரிய அணியில் இணைந்தது எனக்கு மிகுந்த அதிர்ஷ்டம். எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதர். அனைவருக்கும் தெரிந்தவர். அவர் பெயர் எம்.எஸ். தோனி” என்று கூறினார் சஞ்சு.
இதையும் படிங்க: ஆசஸ் முதல் டெஸ்ட்.. ஒரே நாளில் 19 விக்கெட்.. ஸ்டார்க் புதிய சாதனை.. ஸ்டோக்ஸ் தெறி சம்பவம்
“நாளை முதல் சிஎஸ்கேயை ஆதரியுங்கள் என்று சொல்ல மாட்டேன். இன்றே நாம் எல்லோரும் சிஎஸ்கே குடும்பத்தின் ஒரு பகுதி. அனைவரும் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு கோப்பையை வெல்ல வைப்போம்” என்று உற்சாகமாகக் கூறினார் சஞ்சு சாம்சன்.






