நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ஆடுகளமும் பந்து வீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ஷ்டமாக மாற ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களில் சுருண்டது.
இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் பல ஜாம்பவான் வீரர்கள் விளையாடிய காலகட்டத்தில் அந்த அணியால் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்ட முடியவில்லை. அது வெறும் கனவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அந்த வரலாற்று நிகழ்வை நடத்தி இருக்கிறது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பேசும்பொழுது “இந்த வெற்றி மிகவும் நன்றாக இருக்கிறது. இது மொத்த அணியின் கூட்டு முயற்சி. உலகக் கோப்பையை உயர்த்துவதற்கு இன்னும் ஒரு போட்டிதான் இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் டாசை இழந்தது எங்களுடைய அதிர்ஷ்டம். இல்லையென்றால் நாங்களும் பேட்டிங்கை தேர்வு செய்திருப்போம். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்துவீசி சிறப்பாகச் செயல்பட்டார்கள்.
இதையும் படிங்க : இது ஆரம்பம்தான்.. நாங்க கடினமா உழைச்சி திரும்பி வருவோம்.. இந்த ஒரு விஷயம் துரதிஷ்டமா அமைஞ்சிடுச்சு – ரஷித் கான் பேட்டி
இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமானது பார்ட்னர்ஷிப் முக்கியம் என்று எங்களுக்கு தெரியும். மேலும் எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. இதற்கு முன் நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்றது இல்லை. ஆனால் இந்த முறை எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் முழு அணியும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






