சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலியும், ரோகித் சர்மாவும் வரும் அக்டோபர் மாதத்துடன் ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியானது. டி20 டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், 2027 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தருணத்தில் ஆஸ்திரேலிய தொடருடன் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதாகவும், 2027 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புதிய வீரர்களை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் வந்தது. இது தொடர்பாக பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அபாரமான ரெக்கார்ட்கள்:
அதற்கு பதில் அளித்த அவர், உண்மையிலே இப்படி ஒரு செய்தி வந்ததா என்று எனக்கு தெரியவில்லை. தெரியாமல் நான் எந்த ஒரு கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்று சொல்வது கடினமான விஷயம். ஏனென்றால் இரண்டு வீரர்களின் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக அணியில் தொடர வேண்டும்.
குறிப்பாக விராட் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் ரெக்கார்டை பார்த்தீர்கள் என்றால் மிகவும் பிரம்மாண்டமானது. ரோகித் சர்மாவின் ரெக்கார்டும் அப்படித்தான் இருக்கின்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த இரண்டு வீரர்களையும் யாராலையும் மாற்ற முடியாது என்று பாராட்டியுள்ளார்.
இந்தியா வெல்லும்:
இதை தொடர்ந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் குறித்து பதில் அளித்த கங்குலி, தற்போது இந்திய அணிக்கு ஓய்வு கிடைத்திருக்கின்றது.
ஐபிஎல், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் என தொடர்ந்து விளையாடி இருக்கிறார்கள். இதனால் ஆசிய கோப்பை முன் கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நிச்சயம் இந்திய வீரர்களுக்கு பலனாக இருக்கும்.
இதையும் படிங்க: 75 ரன்களுக்கு 6 விக்கெட் என தடுமாறிய ஆஸ்திரேலியா.. டிம் டேவிட் மிரட்டல் அடி.. தென்னாப்பிரிக்காவுக்கு 179 ரன்கள் இலக்கு
இந்தியா பலமான அணியாக உள்ளது. எனவே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். ஏற்கனவே துபாய் ஆடுகளத்தில் நாம் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.






