பத்திரிகையாளர் சந்திப்பில் ரிக்கி பாண்டிங் விராட் கோலி பற்றி கூறியதை விமர்சனம் செய்த இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக இல்லை என்றும், அவர் வேறு அணியில் இருந்திருந்தால் நீக்கப்பட்டிருப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய புறப்படுவதற்கு முன்பாக கம்பீரிடம் பத்திரிக்கையாளர்கள் இதைக் கேட்ட பொழுது “ரிக்கி பாண்டிங்க்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் முதலில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை பற்றி மட்டும் பேசட்டும். விராட் கோலி ரோஹித் சர்மா இருவரும் இப்பொழுதும் ரன் எடுக்கும் ஆர்வம் மற்றும் பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் சாதித்தவர்கள் மேலும் தற்போதும் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது கம்பீர் கருத்துக்கு ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெயின் மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் கம்பீர் பேச்சுக்கு இரண்டு முறை ரிக்கி பாண்டிங் பதிலடியும் கொடுத்திருந்தார். தற்போது இந்த பிரச்சனை பெரிதாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது “கம்பீர் அவர் இருக்கட்டும் என்று நான் சொல்வேன். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியது குறித்து சில விமர்சனங்களை நான் பார்த்தேன். ஆனால் பொதுவாகவே கம்பீர் அப்படித்தான். அவர் ஐபிஎல் வென்ற பொழுதும் அப்படித்தான் இருந்தார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிராகவும் இலங்கை அணிக்கு எதிராகவும் அவர் பயிற்சியில் தோல்வி அடைந்ததால் அவரை யாரும் சரியாக பார்க்கவில்லை”
இதையும் படிங்க: இப்ப நான் மாறிட்டேன்.. விராட் எங்க மண்ணுல சதம் அடிக்கணும்.. காரணம் இதான் – ஜான்சன் விருப்பம்
“ஆஸ்திரேலியர்களின் கிரிக்கெட்டை பார்த்தவரையில் அவர்கள் உங்களிடம் எப்பொழுதும் கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். பாண்டிங், ஹேடன் யாராக இருந்தாலும் சரி அவர்கள் அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதனால் கம்பீர் அப்படி பேசியதில் தவறு கிடையாது. அவருடைய வழியில் அவர் போட்டியிடுகிறார். கம்பீருக்கு வாய்ப்பு கொடுங்கள். இரண்டு மூன்று மாதத்தில் அவர் மேல் தீர்ப்பு எழுதாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.