ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 41வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவை என இருந்தபோது square leg திசையில் பந்தை அடித்து சிக்கந்தர் ராசா மூன்று ரன்களை ஓடியே எடுத்தார்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. அதில் மட்டும் சிஎஸ்கே வென்றிருந்தால் இந்நேரம் 17 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த நிலையில் அன்றைய ஆட்டத்தில் பதிரானாவை எதிர்கொண்ட அனுபவம் குறித்து ஜிம்பாப்வே வீரரும், பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டருமான சிக்கந்தர் ராசா கூறிய கருத்தை தற்போது பார்க்கலாம்.
பதிரானா உண்மையிலேயே திறமையான வீரர். எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது , மலிங்காவை எதிர்கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் பதிரானாவை எதிர்கொள்வது அதைவிட கஷ்டமாக எனக்கு இருந்தது. ஏனென்றால் மலிங்காவின் கை பக்கவாக்கிலிருந்து வரும். பதிரானாவின் கை இன்னும் கீழ் திசையில் இருந்து வருகிறது.
சிஎஸ்கேவுக்கு எதிரான அன்றைய தினத்தில் அந்த ஆடுகளத்தில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பதிரானா வீசினார். சில சமயத்தில் கட்டர் பந்துகளை வீசினார். இதனால் எந்த விதமான பந்து வருகிறது என்பதை எதிர் கொண்டு விளையாடுவதே மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இறைவன் போதுமானவன், என்னால் அந்த கடைசி பந்தில் மூன்று ரன்கள் அடிக்க முடிந்தது.
அன்றைய ஆட்டத்தில் நான் பவுண்டரி அடிக்க தான் முயற்சி செய்தேன். ஆனால் அதிர்ஷ்டம் காரணமாக தான் எங்களால் மூன்று ரன்கள் ஓட முடிந்தது. அன்றைய நாள் உங்களது தினமாக இருந்தால் அதிர்ஷ்டம் நீங்கள் நினைக்காத வகையில் எல்லாம் வேலை செய்யும் என்று சிக்கந்தர் ராசா கூறினார்.
எனினும் சிக்கந்தர் ராசாவால் தான் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும், அடுத்த ஆட்டத்திலேயே அவரை பிளேயிங் லெவனிலிருந்து பஞ்சாப் அணி நிர்வாகம் நீக்கியது. இதேபோன்று நேற்றைய ஆட்டத்தில் கூட பஞ்சாப் அணி சிக்கந்தர் ராசாவை பயன்படுத்தவில்லை. பஞ்சாப் அணையின் தோல்விக்கு முக்கிய காரணமே இது போன்ற வீரர்களை அடிக்கடி மாற்றுவது தான்.
சிக்கந்தர் ராசா போன்ற திறமையான வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியிருந்தால் அவரே நிறைய போட்டிகளை வென்று கொடுத்திருப்பார். ஆனால் மோசமான யுக்திகளால் பஞ்சாப் அணி தற்போது வெளியேறும் நிலைக்கு ஏற்ப தள்ளப்பட்டுள்ளது.