தற்போது நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது அணியின் செயல்பாடு மற்றும் வீரர்களின் திறமைகள் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
எதிரணி தொடக்க வீரர்களின் சிறந்த ஆட்டத்தால் நாங்கள் பேக்ஃபூட்டில் இருந்தபோது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்து மீண்டும் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டுவந்தார் என்றும் எதிரணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
மேலும் விராட் கோலி தற்போது எவ்வித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக பேட்டிங் செய்து விளையாட்டை மிகவும் ரசித்து வருவதாகவும், மைதானத்தின் பவுண்டரிகளை எளிதாக கடக்கும் திறமை அவரிடம் எப்போதும் உள்ளது என்றும் சுப்மன் கில் தெரிவித்தார்.
இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து சுப்மன் கில் பேசும்போது “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அவுட் ஆன தருணத்தில் இந்த ஆட்டத்தை நானே முடித்திருக்க வேண்டும் என்று நினைத்தேன், எனினும் இது எனக்கு ஒரு திருப்திகரமான இன்னிங்ஸ் ஆகும். குல்தீப் யாதவ் போன்ற ஒரு பந்துவீச்சாளர் மிடில் ஓவர்ஸ் பகுதியில் சிறப்பாக பந்துவீசினால் அவர் நிச்சயம் விக்கெட் டேக்கர் ஆவார். இந்தியாவிற்கு பல போட்டிகளை வென்று கொடுத்த விராட் கோலி போன்ற ஒரு வீரரை இயல்பாக விளையாட விட்டாலே போதும், அவர் தனக்கான நாளில் கண்டிப்பாக போட்டியை வென்று தருவார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அணியின் காம்பினேஷன் குறித்து அவர் பேசும்போது “எங்களுக்கு எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் ஆப்ஷன் தேவைப்படுகிறது, குறைந்தது 20 முதல் 30 ரன்கள் வரை பங்களிக்கும் ஒரு வீரர் இருந்தால் சிறப்பாக இருக்கும். நாங்கள் நினைத்த ஸ்கோரை அடைய முடியவில்லை என்றாலும், அணிக்கு எது சரியாக வரும் என்பதை அறிந்துகொள்ள பல்வேறு காம்பினேஷன்களை முயற்சி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.