இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஜிம்பாப்வே ஹராரே ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. இந்தத் தொடருக்கு இந்திய இளம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் சுப்மன் கில் தொடர் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
இந்திய அணி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதோடு, நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை வென்று டி20 உலக சாம்பியன் ஆகவும் இருக்கிறது. அதே சமயத்தில் ஜிம்பாபே அணி சிக்கந்தர் ராஸா தலைமையில் விளையாடுகிறது மேலும் தரவரிசை பட்டியலில் 12வது இடத்தில் இருக்கிறது.
இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருத்ராஜ் மற்றும் அபிஷேக் சர்மா என 4 துவக்க ஆட்டக்காரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். எனவே துவக்க ஆட்டக்காரர்களாக யார் வருவார்கள்? என்கின்ற கேள்வி இருந்தது.
தற்போது இது குறித்து பேசி இருக்கும் சுப்மன் கில் ” நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ரோகித் பாய் துவக்க ஆட்டக்காரராக வந்தார். மேலும் விராட் பாயும் அவருடன் இணைந்து விளையாடினார். நானும் டி20 கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரராக விளையாடியிருக்கிறேன். இந்த வடிவத்தில் துவக்க ஆட்டக்காரராகவே விளையாட விரும்புகிறேன். அவர்களுடைய இடத்தில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும். ஆனால் இருவரும் என்ன சாதித்திருக்கிறார்களோ அதை நான் அடைவது எனக்கு மிகவும் கடினம்.
ஒரு கேப்டனாக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்றால் உங்களுடைய வீரர்களை எப்படி தயார் படுத்துகிறீர்கள் என்பதுதான். எல்லா வீரர்களும் திறமையுடன் இருப்பார்கள், அவர்களிடம் இருக்கும் திறமைகளை போட்டி கொண்டு வர வேண்டும். இந்தத் தொடரில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் நல்ல அனுபவத்தையும் சர்வதேச போட்டி அனுபவத்தையும் பெறுவார்கள்.
இதையும் படிங்க : 5 ரன்னுக்கு 4 விக்கெட்.. கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்.. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெற்றி
ஜிம்பாப்வே ஒரு நல்ல டி20 அணி. அவர்களுடன் நாங்கள் கடைசியாக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போதும் கடைசி ஒருநாள் போட்டியில் நல்ல சவால் கொடுத்தார்கள். போட்டி மிக நெருக்கமாக வந்தது. எனவே இந்தத் தொடர் சவாலான ஒன்றாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.