ஆசிய கோப்பை தொடருக்கு தன்னை தேர்வு செய்யாதது மிகவும் வெறுப்பாக இருப்பதாகவும் ஆனாலும் தான் தொடர்ந்து ஒரு வேலையை செய்து வருவதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
நாளை யுஏஇல் எட்டு ஆசிய அணிகள் பங்குபெறும் ஆசியக் கோப்பைத் தொடர் துவங்க இருக்கிறது. இந்திய அணி நாளை மறுநாள் யுஏஇ அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடுகிறது. இந்த தொடரில் தேர்வு செய்யப்படுவோம் என்று காத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
வெறுப்பாகத்தான் இருக்கும்
இந்த நிலையில் இது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்து பேசியிருக்கிறார். தன்னை தேர்வு செய்யாதது வெறுப்பாக இருந்த போதிலும் கூட, யாராவது சிறப்பாக செயல்படும் பொழுது அதை ஆதரிக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது ” நீங்கள் அணியிலும் பிளேயிங் லெவனிலும் இடம் பெறுவதற்கு தகுதியானவர் என்று உணரும் பொழுது, உங்களை தேர்வு செய்யாவிட்டால் அது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் அணிக்காக ஒருவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார் என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். இறுதியில் அணி வெற்றி பெறுவதே நம்முடைய குறிக்கோள். அணி வெற்றி பெறும் பொழுது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”
நான் இதையே செய்கிறேன்
“இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது சிறந்த உணர்வாக இருந்தது. மேலும் உங்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய வேலையை சரியாக செய்ய பார்க்க வேண்டும். யாரோ ஒருவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கும் போது மட்டும் நீங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது”
இதையும் படிங்க : வெறும் 66 ரன்.. அதிரடியாக சாம்பியன் பட்டம்.. திடீர் விஸ்வரூபம் எடுக்கும் பாகிஸ்தான் அணி.. ஆசிய கோப்பையை வெல்லுமா?
“நீங்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் உங்களை தயார்படுத்திக் கொள்ளும் பொழுது மைதானத்தில் என்ன நடந்தாலும், நீங்கள் களத்திற்கு வெளியே என்ன செய்கிறீர்களோ அதையே பிரதிபலிக்கிறது. உங்கள் தயாரிப்பு நன்றாக இருந்தும் இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாட முடியாவிட்டாலும், மூன்றாவது ஆட்டத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். இது நான் உணர்ந்து கொண்ட உண்மை” என்று கூறியிருக்கிறார்.






