நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக, அனுபவம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாரின் கம்பேக் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டிற்கு மிகப்பெரிய பலத்தை தரும் என்று இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டி பேசி இருக்கிறார்.
இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான கண்டிஷன்ஸில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ள மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார், 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக உருவெடுத்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “புவி அணிக்கு ஏராளமான அனுபவத்தை கொண்டு வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடருக்குப் பிறகு அதை நாம் கொஞ்சம் இழந்து தவித்தோம். நம்மிடம் நிறைய புதிய பவுலர்கள் இருந்தனர். ஆனால் புவனேஷ்வர் குமார் தனது அனுபவத்தையும் திறமையையும் இந்த பவுலிங் யூனிட்டிற்கு கொண்டு வருவார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அணியில் இருக்கும் கூடுதல் பேக்அப் ஆப்ஷன்கள் குறித்து அவர் தொடர்ந்து பேசும்போது “அணியில் நிறைய பேக்அப் வீரர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ஒருவகையில் அது நல்லதுதான், அது தற்போதைய அணி உறுப்பினர்களை அணிக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் போட்டியில் வெற்றி பெற வேண்டும், அதுதான் இறுதி இலக்கு. இதை ஒரு இனிமையான தலைவலி என்றுதான் சொல்வேன், ஆனால் இதுபோன்ற ஒரு தலைவலி ஒவ்வொரு அணிக்கும் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.






