“நீங்க இன்னும் கத்துக்கணும்பா” – புஜாரா அட்வைஸ்!

0
82
Pujara

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. இத்தோடு விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் வெளியேறினர்.

இதற்கடுத்து இந்த பொறுப்புகளுக்கு வந்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கு முன்னும் பெரிய பொறுப்புகள் இருந்தன. ஒரு புதிய அணியை ஒரு புதிய ஆட்ட அணுகுமுறையை அவர்கள் கொண்டுவர வேண்டி இருந்தது. இதற்காக அவர்கள் தொடர்ந்து பல பரிசோதனை முயற்சிகளை அணிக்குள் செய்து விடைகளை கண்டறிந்து வந்தார்கள். இவர்களுடைய இலக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கும் டி20 உலகக் கோப்பையாக இருக்கிறது.

- Advertisement -

அதற்கு முன்னால் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு அமைந்தது. ஆனால் இந்தத் தொடரிலும் ஒரு முழுமையான இந்திய அணியை இவர்களால் களமிறக்க முடியவில்லை. காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் இருவரும் ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதே சமயத்தில் தொடரின் நடுவில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறினார். இதனால் ஒரு முழுமையான அணியை களமிறக்கி பரிசோதிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியோடு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள். பாகிஸ்தான் போட்டியில் துவக்க வீரர்கள் மிக சிறப்பான பங்களிப்பை தந்தும், மிடில் வரிசை மற்றும் கடைசியில் வந்த பேட்ஸ்மேன்கள் அதை தவற விட்டார்கள். இதேபோல் நேற்று இலங்கை அணியுடனான ஆட்டத்திலும் இதே தவறை திரும்ப செய்தார்கள். இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் ஏறக்குறைய வெளியேறி இருப்பது இந்திய ரசிகர்களை மட்டும் அல்லாது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து இந்திய டெஸ்ட் அணியின் பேட்ஸ்மேன் செதேஷ்வர் புஜாரா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் கூறும்போது ” 6 மற்றும் 15 இந்த இடைப்பட்ட ஓவர்களை நாங்கள் ஆட்டத்தில் சரியாக ஆடி முடிக்கவில்லை. நாங்கள் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். இதனால் எங்களால் பதினைந்து ஓவருக்குப் பிறகு தாக்கி விளையாட பேட்ஸ்மேன்கள் இருப்பதில்லை. இதற்கான விடையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த இடத்தில் நன்றாக பேட் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய புஜாரா “இன்று நாங்கள் சரியாக தொடங்கவில்லை. ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த ஆட்டத்தில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் எங்களால் கடைசி 5 ஓவர்களில் தாக்கி ஆட முடியவில்லை. மிடில் ஓவர்களில் பேட்டிங் செய்ய நாங்கள் இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்!