இந்திய இடதுகை துவக்க ஆட்டக்காரர் 38 வயதான டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தான் இணைந்து விளையாடிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த இடதுகை வீரர்களில் மிகவும் முக்கியமானவர் ஷிகர் தவான். ஏனென்றால் அவர் துவக்க ஆட்டக்காரராக இருந்தார். மேலும் ரோகித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை துவக்க வீரராக சிறப்பாக அமைய இவருடைய பங்கும் மிகப்பெரியது. தேவையான நேரங்களில் ரோகித் சர்மா மீது ரன் அழுத்தம் இல்லாமல் பலமுறை இவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஷிகர் தவான் கிரிக்கெட் வாழ்க்கை
ஷிகர் தவான் ஒட்டுமொத்தமாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இந்திய அணிக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருக்கிறார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இவருடைய செயல்பாடு மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கிறது.
இவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மொத்தம் 167 போட்டிகளில் விளையாடி 17 சதம் மற்றும் 39 அரைசதங்கள் உடன் 6793 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய சராசரி 44 ரன்னாக இருந்திருக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் அடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர் 24 சதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக எடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் மூவரும் சேர்ந்து 2013 முதல் 2019 வரையில் 100 சதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கத.
3 பேர் கூட்டணியில் 100 சதங்கள்
இதுகுறித்து ஷிகர் தவான் கூறும்பொழுது “நாங்கள் அழகான ஒரு பயணத்தின் பகுதியாக இருந்திருக்கிறோம். நான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மூவரும் சேர்ந்து குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் 100 சதங்கள் அடித்திருப்பதாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது ரவி பாய் எங்களுக்கு பயிற்சியாளராக இருந்தார்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தேசிய கிரிக்கெட் அகாடமியும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. காயத்திற்கு எப்படி மறுவாழ்வு செய்ய வேண்டும் எப்பொழுது பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அங்கிருந்து கற்றுக் கொண்டேன். இதற்காக நான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
இதையும் படிங்க : நீங்க இத செய்விங்கனு எனக்கு நல்லா தெரியும் – ஷிகர் தவான் ஓய்வு பற்றி கம்பீர் ஹர்திக் வாழ்த்து செய்தி
மேலும் எனது கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். டங்கன் ப்ளட்சர், சஞ்சய் பாங்கர், விக்ரம் ரத்தோர், ரவி சாஸ்திரி ராகுல் டிராவிட் மற்றும் அனைத்து பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் என எனக்காக உழைத்த அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.