நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனில் இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்ட போட்டி லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்து பஞ்சாப் அணி கடைசியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. வேகப் பந்து வீச்சில் கலக்கிய இந்திய இளம் வீரர் மயங்க் யாதவ் பஞ்சாப் அணியிடமிருந்து வெற்றியை பறித்து லக்னோ அணியை வெல்ல வைத்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் 54, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42, குர்னால் பாண்டியா 43* ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் சாம் கரன் 3, அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் முதல் விக்கெட்டுக்கு 102 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பத்து ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது. எனவே பஞ்சாப் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நேரத்தில் பந்து வீச்சுக்கு அனுப்பப்பட்ட அறிமுக வீரர் மயங்க் அகர்வால் ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா என முக்கிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி, நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் தந்து, போட்டியை ஒட்டுமொத்தமாக லக்னோ அணியின் பக்கம் கொண்டு சென்று விட்டார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மயங்க் யாதவ் தொடர்ச்சியாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுகிறார். அதிகபட்சமாக 155.8 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருந்தார்.
தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ஷிகர் தவான் ” லக்னோ அணியினர் நன்றாக விளையாடினார்கள். லிவிங்ஸ்டன் காயம் அடைந்ததால் துரதிஷ்டவசமாக விளையாட முடியவில்லை. இல்லையென்றால் அவர் நான்காவது இடத்திற்கு வந்திருப்பார். மயங்க யாதவ் வேகம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் தனது வேகத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அனுபவ வீரராக இருக்கின்ற காரணத்தினால் நான் வேகத்தை பயன்படுத்துவேன் என்று தெரிந்து, டாட் பந்துகள் மற்றும் சிங்கிள் எடுக்க மட்டுமே அனுமதித்தார்.
இதையும் படிங்க : 155.8 கிமீ.. வேகத்தில் பஞ்சாப்பை அலறவிட்ட அறிமுக இந்திய இளம் வீரர்.. லக்னோ அணி வெற்றி
அதே சமயத்தில் நான் பேர்ஸ்டோ மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரிடமும் வேகத்தை பயன்படுத்தி விளையாடுமாறு சொன்னேன். ஆனால் அவர்கள் வேகத்தை பயன்படுத்தி விளையாடுவதற்கு இடம் தராமல் உடம்புக்குள் பந்தை வீசி விக்கெட்டை வீழ்த்தினார். உண்மையில் அவர் பந்துவீச்சு சிறப்பானது. நாங்கள் எங்களுடைய தோல்விகள் குறித்து அலச வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.