கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஷா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இந்த நிலையில் அவருடைய நண்பரான பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷான்க் சிங் அவர் குறித்து சில முக்கியமான விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஷஷான்க் சிங் வேறு ஒருவருக்கு பதிலாக தெரியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு அவர் 5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
பிரித்விஷா வுக்கு நிகழ்ந்த சோகம்
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சச்சின் மற்றும் சேவாக் கலவையாக பிரித்வி ஷா பார்க்கப்பட்டார். இந்திய உள்நாட்டு தொடர்களான இராணி மற்றும் ரஞ்சி, சர்வதேச கிரிக்கெட் என மூன்றிலும் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரராக பிரித்விஷா இருக்கிறார். இப்படியான நிலையில் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காகவும், உள்நாட்டுப் போட்டியில் மும்பை மாநில அணிக்காகவும் தொடர்ந்து விளையாடிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் அணி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், அவருடைய விருப்பத்திற்கு செயல்படுகின்ற காரணத்தினாலும், சரியான முறையில் பயிற்சிகளுக்கு வராத காரணத்தினாலும், மும்பை மாநில அணியில் நீக்கப்பட்டதோடு, ஐபிஎல் தொடரிலும் இந்த முறை எந்த அணியும் வாங்கவில்லை.
பிரித்வி ஷா இதை மாற்றிக் கொள்ள வேண்டும்
பிரித்வி ஷா குறித்து பேசி இருக்கும் ஷஷான்க் சிங் கூறும்பொழுது “பிரித்வி ஷா மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கும் வீரர். அவர் தன்னுடைய அடிப்படைகளுக்கு மீண்டும் சென்றால் எதையும் சாதிக்க முடியும். அவரை 13 வயதில் இருந்து நான் அறிவேன். அவருடன் மும்பை கிளப் கிரிக்கெட்டில் விளையாடியதில் இருந்து எனக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. அவரிடம் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அவருக்கு சில விஷயங்களில் வித்தியாசமான பார்வை இருக்கிறது”
இதையும் படிங்க : 43 வயசுல எப்படி தோனி உங்களால முடியுதுனு கேட்டேன்.. அவர் பதில் ஆச்சரியமா இருந்தது – ஹர்பஜன் சிங் பேட்டி
“ஒருவேளை அவர் தனது பணி நெறிமுறைகளை மாற்றலாம். அவர் இரவு 11 மணிக்கு தூங்க போவதற்கு பதிலாக இரவு 10 மணிக்கு தூங்க செல்லலாம். மேலும் அவரது உணவு முறையை மேம்படுத்தலாம். இந்த விஷயங்களில் சிலவற்றை ஏற்றுக்கொண்டு அவர் மாற்றிக் கொண்டால், இந்திய கிரிக்கெட் க்கு அது மிகவும் சிறந்ததாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






