தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டிருக்கும் இந்திய அணி விளையாடிய பயிற்சி போட்டியில் சர்துல் தாக்கூர் 122 ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் திருப்பி இருக்கிறார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, இந்திய அணியை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பயிற்சி போட்டியில் நேற்று முதல் விளையாட ஆரம்பித்தது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத கில், சாய் சுதர்சன் போன்றவர்களுக்கு இந்த பயிற்சி போட்டி உதவியாக அமைந்தது.
சர்பராஸ் கான் கலக்கல்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் கில் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் அரை சதம் அடித்தார்கள். இந்த இந்திய அணி 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பெரிய அளவில் இந்திய ஏ அணியின் பந்துவீச்சாளர்களால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய ஏ அணிக்கு சர்பராஸ் கான் பெரும் 76 பந்தில் அதிரடி சதம் அடித்து அசத்தினார். அவருடைய சதத்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரண்டாம் நாள் முடிவில் சர்துல் தாக்கூர் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
சர்துல் தாக்கூர் தந்த தலைவலி
இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய சர்துல் தாக்கூர் சதம் அடித்து 122 ரன்கள் எடுத்து அசத்தினார். குறிப்பாக இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஸ்தீப் சிங் என முக்கியமான நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்று இருந்தார்கள். அவர்களாலும் இந்திய ஏ அணி பேட்ஸ்மேன்களை எதுவும் செய்ய முடியவில்லை. குறிப்பாக இரண்டாம் நாள் முழுவதுமாக பந்து வீசிய பும்ரா விக்கெட் கைப்பற்றவில்லை.
இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு இந்த 30 வயசு இந்திய வீரரை வச்சு செக் வைங்க.. குதிரை மாதிரி அவரையும் விடாதீங்க – அஸ்வின் அறிவுரை
இந்த நிலையில் நாளை திங்கள்கிழமை வரையில் இந்த பயிற்சி போட்டியை நடத்த இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் திடீரென மூன்றாவது நாள் உடன் இந்த பயிற்சி போட்டியை ரத்து செய்து விட்டது. இதைத் தொடர்ந்து வீரர்கள் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு கிளம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






