ஷேன் வார்னே குறித்து பதிவு செய்த ஆர்.சி.பி – கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் ரசிகர்களின இதயங்களை வென்ற பெங்களூர் அணி

0
27
RCB special gesture for Shane Warne

இந்த வருடம் ஐ.பி.எல் சீசன் இரசிகர்களுக்கு பல கலவையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. இந்த ஆண்டு இரண்டு புதிய அணிகள் பங்கு பெற்றிருக்கின்றன. ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் ஒன்பது முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பை, சென்னை அணிகள் ஒரேசேர ப்ளே-ஆப்ஸ் சுற்றில் இல்லாத தொடராக இத்தொடர் அமைந்திருக்கிறது.

மேலும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷாப் பண்ட் போன்றவர்கள் சிறப்பாகச் செயல்படாமல் போக, இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்தினார்கள். மேலும் இந்திய அணிக்கு ஏற்கனவே விளையாடியுள்ள மூத்த வீரர்களான உமேஷ் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா போன்றவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்கு புதிய அணிகளான குஜராத், லக்னோ அணிகளோடு, ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் தகுதி பெற்றன. இதில் இறுதி போட்டிக்கு குஜராத், ராஜஸ்தான் அணிகள் முன்னேறி இருக்கின்றன. இந்தப் போட்டி ஞாயிறு மே 29ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் இரவு எட்டு மணிக்குத் துவங்குகிறது.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது தகுதிசுற்று ஆட்டத்தில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் பவுலிங் என மிகச்சிறப்பாகச் செயல்பட்டு பெங்களூர் அணியை எளிதாய் வீழ்த்தியது. பெங்களூர் அணியின் ஐ.பி.எல் கோப்பை கனவு பதினைந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து கலைந்தது.

ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் பெங்களூர் அணி தனது செயல்களால் மற்ற அணிகள், இரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறது. நேற்று ஆட்டத்தைத் தோற்ற பின்பு பெங்களூர் அணிக்கான அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் “வார்னே உங்களைப் பார்த்து புன்னகைப்பார். நீங்கள் இன்றிரவு சிறப்பாக விளையாடினிர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ். இறுதிபோட்டியில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துக்கள்” என பதிவிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்துச் செய்தி பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்க, அவர்கள் பெங்களூர் அணியின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் மறைந்த கிரிக்கெட் லெஜன்ட் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐ.பி.எல் துவங்கப்பட்ட முதல் ஆண்டான 2008 சீசனில் சாம்பியன் ஆனது. அதற்குப் பிறகு இந்த ஆண்டுதான் சஞ்சு சாம்சன் தலைமையில் இறுதிபோட்டிக்கே தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!